சேலம்: ஆத்தூர் அருகே 510 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் - 2 பேர் கைது
ஆத்தூர் அருகே போலீசார் நடத்திய சோதனையில் 510 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குறிப்பாக கல்வராயன்மலை வனப்பகுதியில் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சப்பட்டு, அங்கிருந்து லாரி டியூப்கள் மூலமாக இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது.
அதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பைத்தூர் மலை அடிவாரத்தில், சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த துரை,முருகேசன் ஆகிய இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ஆத்தூர் அருகே முட்டல் ஏரிக்கரையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரை கண்டதும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் வாகனங்களை அப்படியே போட்டு விட்டு தப்பியோடினர். இதனையடுத்து 4 இருசக்கர வாகனங்களை சோதனையிட்ட போது அதில் கள்ளச்சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இருசக்கர வாகனங்களையும், 400லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
வெவ்வேறு இடங்களில் போலீசார் நடத்திய சாராயச் சோதனையில் 2 பேரை கைது செய்த போலீசார் 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் 510 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.