ஆத்தூர் அருகே நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த முகமுடி கொள்ளையர்கள் 3 பெண்களை தாக்கி 10 பவுன் தங்க நகை, 5 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கோட்டை லட்சுமி நகரில் வசித்து வருபவர் ருக்குமணி. இவரது கணவர் மணி. லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். மணி லாரி ஓட்டும் பணிக்கு வெளியூர் சென்றதால் ருக்குமணி அவரது தாய் அமராவதி, மகள் மாலினி ஆகிய மூன்று பேரும் தனியாக வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது நள்ளிரவில் ஆறு பேர் கொண்ட முகமுடி கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த மூன்று பெண்களையும் உருட்டு கட்டையால் தாக்கி கத்தி முனையில் பீரோவில் இருந்த சுமார் 10 பவுன் தங்க நகை, 5 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து கொண்டு, சத்தம் போட்டால் கொன்று விடுவதாக மிரட்டி மூன்று பெண்களை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு தப்பியோடியுள்ளனர்.
பின்னர் அருகில் இருந்த கார் பார்க்கிங் வாட்ச்மேன் உதவியுடன் கதவை திறந்து வெளியே வந்த பெண்கள், ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை பதிவு செய்து முகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இதனிடையே ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளில் முகமுடி கொள்ளையர்கள் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.