சேலம்: சசிகலாவை கண்டித்து ஈபிஎஸ் நடத்திய அதிமுக கூட்டத்தில் தீர்மானம்
அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிகலாவிற்கு கண்டனம் தெரிவிப்பதாக, சேலத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
சேலம் மாவட்டம் ஒமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர்கள் மணி, நல்லதம்பி, சித்ரா, ராஜமுத்து, ஜெய்சங்கரன், பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் சசிக்கலாவை கண்டிப்பது, அ.தி.மு.க.விற்கும் சசிகலாவிற்கும் எந்தவித தொடர்போ, சம்பந்தமோ இல்லை. இதைமீறி அதிமுக மீது தவறான கருத்துக்களை கூறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, அ.தி.மு.க சார்பில் ஆலோசனை கூட்டம் ஏதும் நடைபெறவில்லை என்றும், சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் மட்டுமே போடப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வின் தற்போதைய தலைமை பன்னீர்செல்வமும், பழனிச்சாமியும்தான்; அவர்கள் முடிவுதான் தொண்டர்களின் முடிவு என்று கூறினார்.