சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது
சேலத்தில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்கும் நோக்கில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக மேலும் இரண்டு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கி மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சேலத்தில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா பயணிகள் ஏற்காடு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு வரும் 23ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மால், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கொங்கணாபுரம் வாரச்சந்தை, வீரகனூர் வாரச்சந்தை, மேட்டூர் அணை பூங்கா ஆகியவை வரும் 23ஆம் தேதி வரை செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.