சேலம் மாவட்டத்தில் 695 கவுன்சிலர் பதவிக்கு 3 ஆயிரத்து 206 பேர் போட்டி
நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 695 கவுன்சிலர் பதவிக்கு 3 ஆயிரத்து 206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்;
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகள் என மொத்தம் 38 உள்ளாட்சி அமைப்புகளில் 699 பதவிகள் உள்ளன. கடந்த ஜனவரி 28 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை சேலம் மாவட்டம் முழுவதும் திமுக, அதிமுக உள்பட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேட்சைகள் என 4 ஆயிரத்து 416 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இதில் 79 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் இறுதிநாளில் ஆயிரத்து 127 பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். மேலும், மேச்சேரி, கொளத்தூர், தெடாவூர் ஆகிய 3 பேரூராட்சிகளில் 4 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வெளியான இறுதி வேட்பாளர் பட்டியலின்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி 60 வார்டுகளுக்கு 618 பேரும், 6 நகராட்சிகளில் உள்ள 165 வார்டுகளில் 682 பேர் மற்றும் 31 பேரூராட்சிகளில் உள்ள 470 வார்டுகளில் 1906 பேர் என மொத்தமுள்ள 695 கவுன்சிலர் பதவிகளுக்கு 3 ஆயிரத்து 206 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.