சேலத்தில் 2021 புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமானோர் கோவில்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் வழிபட்டனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தமிழக அரசு தடை விதித்ததால் சேலத்தில் வழக்கத்துக்கு மாறாக நள்ளிரவு கொண்டாட்டம் களை இழந்தது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே நண்பர்கள், உறவினர்களுடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடினர். தேவாலயங்களில் குறைந்த அளவிலான கிறிஸ்தவர்களே சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. புத்தாண்டை முன்னிட்டு சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜ கணபதி திருக்கோவிலில், விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதலே திரளானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல சேலம் கோட்டை பெருமாள் கோவிலிலும் கூட்டம் அதிகளவில் இருந்தன. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை பக்தர்கள் வழிபட்டனர். இதேபோல் ஆதி எல்லைபிடாரி அம்மன் கோவில், கோட்டை அழகிரிநாதர் கோவில், சுகவனேஷ்வரர் கோவில், அழகாபுரம் பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.