சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு எட்டு வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
சேலம்-சென்னை இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க கோரி சேலம், திருவண்ணாமலை,காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்துடன் கைகளில் நெல், கரும்பு ஏந்திக்கொண்டு எட்டு வழி சாலை திட்டத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திரைப்பட இயக்குனர் கௌதமன், திமுக,கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.விவசாயிகளை கட்டுப்படுத்துவதற்காக காவல்துறையினர் 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வஜ்ரா வாகனங்களுடன் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.