புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்: முதல்வர் தலைமையில் ஆலோசனை
புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க முதல்வர் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.
மிக்ஜம் புயல் தாக்கத்தால் தமிழகத்தின் வடமாவட்டங்களில் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்புக்குள்ளானது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளத்திலிருந்து பொதுமக்களை மீட்க, நிவாரணப் பொருட்கள் வழங்கவும் ஏராளமான மக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் களத்தில் இறங்கியுள்ளது.
இந்த வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் மீட்புப் பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ முதலமைச்சர் பொது நிவாரண நிதி அளிக்க வசதியாக வங்கி கணக்குள் மற்றும் யுபிஐ முகவரிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் அட்டை மூலம் நிவாரண நிதி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.