கப்பலில் இலங்கைக்கு நிவாரணப்பொருள்: கொடியசைத்து அனுப்பினார் ஸ்டாலின்
அண்டை நாடான இலங்கைக்கு, தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலை, சென்னையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
பக்கத்து நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருட்களின் விலை உயர்வால், மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இச்சூழலில், நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவ, தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து, இலங்கை மக்களுக்கு அனுப்புவதற்காக அரிசி, பால் பவுடர், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை தயார் செய்யும் பணிகள் வேகமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகள் முடிவடைந்து, இன்று மாலை சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அனைத்தும் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னை துறைமுக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நிவாரணப் பொருள்களுடன் இருந்த கப்பல்களின் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக ரூ.8.87 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்கள் கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில், 9,500 டன் அரிசி, 200 டன் பால் பவுடர், 30 டன் மருந்து பொருட்கள் இடம் பெற்றுள்ளன.