ஓட்டுப்போட வந்த 100 வயது மூதாட்டிக்கு உதவி: நெகிழ வைத்த கலெக்டர்
காவேரிப்பாக்கம் ஈராளச்சேரியில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த முதாட்டியை அழைத்து சென்று உதவி செய்த கலெக்டர்.
காவேரிப்பாக்கம் ஈராளச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த முதாட்டியை கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் அழைத்துச் சென்று உதவி செய்து நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார் .
இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் காவேரிப்பாக்கம், நெமிலி, அரக்கோணம், சோளிங்கர் ஆகிய ஒன்றியங்களுக்குட்பட்ட கிராமங்களின் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ். தலைவர் மற்றும் பஞ். வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கியது.
இந்நிலையில், இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன், காலை தேர்தல் நடக்கும் பகுதிகளை ஆய்வுசெய்யும் விதமாக காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஈராளச்சேரி வாக்குச்சாவடக்குச் சென்றார். அப்போது வாக்குச்சாவடி முன்பாக ஓட்டுப் போட வரிசையில் நின்றிருந்த பொதுமக்களிடையே நிற்கவே முடியாமல் நின்றிருந்த மூதாட்டியைப் பார்த்தார்.
உடனே கலேக்டர் பாஸ்கரப்பாண்டியன், அவரிடம் சென்று கைத்தாங்கலாக மூதாட்டியை ஓட்டுபோடும் இடத்திற்கு அழைத்துச் சென்று ஓட்டுப் போட வைத்தார். பின்னர் மூதாட்டியிடம் கனிவாக விசாரித்தார். அதில், மூதாட்டி தனக்கு 100 வயதாகிறது என்று கூறியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
மூதாட்டி, தனது தள்ளாத வயதிலும் ஜனநாயக்கடமையை நிறைவேற்ற வந்தது பெருமையளிக்கிறது என்று முதாட்டியைக் அங்கிருந்தவர்கள் பாராட்டினர். கண்டவுடன் கலெக்டர் ஓடிச்சென்று அவரிடம் கனிவாக பேசி அழைத்துச் சென்று ஓட்டுப்போட வைத்தது அப்பகுதியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.