கோவிட் டெஸ்ட்: அலட்சியம் காட்டும் சோளிங்கர் அரசு மருத்துவமனை

விடுமுறை தினங்கள் என்பதால் கொரோனா பரிசோதனை முடிவு தாமதமாகத்தான் வரும் என அலட்சியமான பதில்

Update: 2022-01-17 07:31 GMT

சமூக இடைவெளியின்றி புறநோயாளிகள் பிரிவில் குவிந்த பொதுமக்கள் 

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அரசு மருத்துவமனை தேசிய தரச் சான்றிதழ் பெற்ற மருத்துவமனையாக அறியப்படுகிறது. ஆனால் அங்கு பொதுமக்களை நடத்தும் விதம் உண்மையிலேயே தரச் சான்றுக்கு தகுதியுடையதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

சமீபத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சென்றவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அலுவலக கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், உடன் கலந்து கொண்ட அதிகாரிக்கு தொற்று உறுதியானதால், அந்த நபர் பொங்கலன்று கொரோனா பரிசோதனை செய்வதற்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்,

கோவிட் பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என கேட்டதற்கு, புறநோயாளிகள் பதிவு சீட்டு பெற்று வருமாறு கூறியுள்ளனர், அவரும் வரிசையில் நின்று பதிவு சீட்டு பெற்று மருத்துவர்களிடம் காட்டியபின், சோதனை மேற்கொள்ள குறிப்பு எழுதி மீண்டும் அதே புறநோயாளிகள் பதிவு பிரிவிற்கே அனுப்பியுள்ளனர்.

தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர் வந்துள்ளார், ஆனால், வரிசையில் சமூக இடைவெளி இல்லை. மற்ற நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்தவர்களுடன் இவரும் வரிசையில் நின்றால், தொற்று பரவும் என்பது கூடவா அரசு மருத்துவர்களுக்கு தெரியாது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வருபவர்களுக்கு தனி கவுண்ட்டர் வைத்திருக்கலாமே?

பரிசோதனைக்கு மாதிரியை கொடுத்துவிட்டு பின்னர் மாத்திரைகள் கேட்டுள்ளார். அதற்கு, மாத்திரைகள் தேவையில்லை என மருத்துவர்கள் கூறி அனுப்பியுள்ளனர். பின்னர் வீட்டிற்கு வந்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

சனியன்று அவருடன் அலுவலக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இவருக்கு வராததால், தனக்கு நெகடிவ் என முடிவு செய்துள்ளார். ஆனால், நண்பர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்தலை தொடர்ந்துள்ளார்.

திங்களன்று அவர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை அறிக்கை கேட்டதற்கு அவருக்கு கிடைத்த பதில், அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியபோக்கை காட்டியது. விடுமுறை தினம் என்பதால் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை, முடிவுகள் நாளை தான் கிடைக்கும் என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர்.

அவருடன் பணியாற்றும் மற்றவர்களுக்கு இணையதளத்தில் ரிப்போர்ட் வந்துள்ளதே என கேட்டதற்கு, இந்த மருத்துவமனையில் அப்படித்தான், அங்கு விடுமுறையில் வேலை பார்த்திருப்பார்கள், இங்கு இனிமேல் தான் பரிசோதனை மேற்கொள்ளுவார்கள் என சாதாரணமாக கூறியுள்ளனர்,

மருத்துவம் என்பது அத்தியாவசிய பணிகள் ஒன்று என அவர்களுக்கு தெரியாதா? நாடு முழுவதும் தொற்று அதிவேகமாக பரவி வரும் இந்த நேரத்தில், பரிசோதனை முடிவிற்கு நான்கு நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது நிச்சயமாக அலட்சிய போக்கு தான்.

மாவட்டம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் செயல்பட்டுவரும் நிலையில், அரசு மருத்துவமனையே இவ்வாறு அலட்சியமாக நடந்து கொள்வது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் சுகாதார செயலர் ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு

Tags:    

Similar News