பாணாவரம் காப்புக்காடு பகுதியில் வனஉயிரியல் பூங்கா அமைக்க கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாணாவரம் காப்புக்காடு வனபகுதியில் வனஉயிரியல்மற்றும் சிறுவர் பூங்கா அமைத்து சுற்றுலா தலமாக அமைத்து தர கோரிக்கை

Update: 2022-03-23 00:59 GMT

சிறுவர் பூங்கா (காட்சிப்படம்)

சோளிங்கா் தொகுதிக்குட்பட்ட பாணாவரம் ஊராட்சியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். பாணாவரம் பகுதியையொட்டி சென்னை - பெங்களூரு ரயில் பாதை அமைந்துள்ளது. பாணாவரத்திலுள்ள சோளிங்கர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் மற்றும் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்கின்றன. இதனால் எப்பொழுதும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும்

மேலும் இப்பகுதியில் சுமார் 8 கிலோ மீட்டர் சுற்றளவில், 1,028 ஏக்கர் பரபரப்பளவு கொண்ட வனபகுதி உள்ளது. இந்த காப்புக்காடு வனபகுதியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மான், நரி, முயல், காட்டுபன்றி உள்ளிட்ட வனஉயிரினங்கள் உள்ளன. இந்த வனஉயிரினங்கள் இரை தேடி காப்புக்காட்டை விட்டு வெளியே வரும்போது ரயிலில் சிக்கி இறக்கின்றன. 

இதனால் இந்த வனஉயிரினங்களை பாதுகாக்கும் வகையில் வேலி அமைத்து இந்த வனபகுதியில் வனஉயிரியல் பூங்கா மற்றும் சிறுவர் பூங்கா அமைத்து பாணாவரம் காப்புக்காடு வனபகுதியை சுற்றுலா தலமாக அமைத்திட தகுந்த நடவடிக்கை எடுக்க இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள், இளைஞா்கள் ஆகியோர் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினரிடம் சில மாதங்களுக்கு முன் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட்டில் சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை மேம்பாட்டிற்காக ரூ.849.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டமன்ற கூட்டத்தில் வன உயிரியல் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News