திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகள்
நெமிலி அருகே திறந்தவெளி நெற்கிடங்கில் வீணாகிவரும் பல லட்சம் நெல் மூட்டைகளை பாதுகாக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த கோடம்பாக்கத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் மற்றும் வாணிபக்கழகம் திறந்த வெளி நெற்கிடங்கை துவக்கியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேற்பார்வையில் 84 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்பில் விவசாயிகளிடம் வாங்கப்பட்ட சுமார் 10லட்சத்திற்கு மேலான நெல்மூட்டைகள் கடந்த 2மாதங்களாக கொண்டு வந்து திறந்தவெளி பகுதிகளில் அடுக்கி வைத்துள்ளது.
அவைகள் தற்போது பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் மத்தியில் புகார்கள் எழுந்து வருகிறது. அதிகாரிகளின் மெத்தனத்தால் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையில் நனைந்து வீணாகி காணப்படுகிறது. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
அரசின் அலட்சியப்போக்கால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து பயனற்றதாக மாறி வரும் நிலையைக்கண்டு மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், விவசாயிகள் உழைப்பால் விளைவித்துத் தந்த நெல்மணிகள் பாதுகாப்பின்றி வீணாகி வருவது, தங்களை அரசு உதாசீனம் செய்வதைப்போன்று உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு உடனடியாக கோடம்பாக்கம் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பின்றி அடுக்கி வைத்துள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகள் பயனற்றதாக மாறி வருவதை தடுத்து விரைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளனர்.