குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த சோளிங்கர் அரசு மருத்துவமனை
சோளிங்கர் அரசு மருத்துவமனை மீது நாம் சுட்டி காட்டிய குறைகளை ஆக்கபூர்வமான விமர்சனமாக எண்ணி, உடனடியாக நடவடிக்கை எடுத்த மருத்துவமனை நிர்வாகம்
நமது இன்ஸ்டா நியூஸ் தளத்தில் சோளிங்கர் மருத்துவமனை குறித்த செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது குறித்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அறிய இன்று நமது செய்தியாளர் நேரில் சென்று பார்த்தபோது நாம் கூறியிருந்த சில குறைகள் உடனடியாக சரி செய்யப்பட்டிருந்தது.
- கோவிட் பரிசோதனைக்கு வரும் பொதுமக்களுக்கு தனி வரிசை அமைக்கவேண்டும் என கூறியிருந்தோம். அதன்படி, தனி வரிசை மட்டுமல்லாது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கட்டங்களும் அமைக்கப்பட்டிருந்தது.
- கோவிட் சோதனைக்கு மாதிரி கொடுக்க வந்தவர்களுக்கு அங்கேயே சத்து மாத்திரை கொடுக்கப்படுகிறது.
- புறநோயாளிகள் பிரிவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசை அமைக்கப்பட்டுள்ளது.
நாம் சுட்டி காட்டிய குறைகளை மருத்துவமனை மீதான அக்கறையிலான ஆக்கபூர்வமான விமர்சனமாக எண்ணி, உடனடியாக நடவடிக்கை எடுத்த சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்ஸ்டாநியூஸ் சார்பாக பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் உள்ள பரிசோதனை மையங்களில் பெறப்பட்ட மாதிரிகள் மீதான முடிவுகள் வெளியாக இரண்டு அல்லது மூன்று தினங்கள் ஆவதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளது. பரிசோதனை முடிவுகள் விரைவில் கிடைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.