டாஸ்மாக் ஊழியரிடம் பணம் கொள்ளையடித்த காவலர் கைது
ரெண்டாடி அருகே ஏரிமின்னூர் கிராமத்தில் டாஸ்மாக் ஊழியரிடம் கொள்ளையடித்த காவலர் மற்றும் கூட்டாளியை போலீசார் கைது செய்தனர்.
இராணிப்பேட்டை சோளிங்கர் அடுத்த ரெண்டாடி அருகே உள்ள ஏரிமின்னூர் கிராமத்தை சேர்ந்த பழனி. இவர் பாணவரம் டாஸ்மார்க் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.
நேற்று விற்பனையை முடித்தபின்பு விற்பனைத்தொகை ரூ 2 லட்சத்து 33 ஆயிரத்து 139ஐ பையில் வைத்து தனது பைக் பெட்டியில் வைத்துக் கொண்டு வீடு திரும்பியபோது வீட்டினருகே போலீஸ் உடையில் இருவர் வழிமறித்து பைக்கின் ஆர்சி புக்மற்றும் லைசென்ஸ் ஆகியவற்றைக் காட்டும்படி கேட்டனர். பழனி வீட்டிற்கு சென்று டாக்குமென்டுடன் திரும்பிவந்து பார்த்த போது, அங்கிருந்த இருவரும் பைக்கின் பெட்டியை உடைத்து பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
உடனே பழனி இதுகுறித்து சோளிங்கர் போலீஸில் புகார் அளித்தார். போலீஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து போலீஸ் உடையில் வந்த மர்மநபர்கள் குறித்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் சோளிங்கர் அடுத்த கீழண்டைமோட்டூரைச் சேர்ந்த ரகு (29), மற்றும் சோளிங்கர் மேற்கு போர்டியான் தெரு தனா(எ) தனசேகரன்( 27) ஆகிய இருவரைப்பிடித்து விசாரித்தனர்.
அதில், ரகு திருவள்ளூர் மாவட்ட காவல் துறையில் மோப்பநாய் பிரிவில் 2ஆம் நிலைக்காவலராக பணியாற்றி வருகிறார். அவரது நண்பர், தனா ஏற்கனவே பல்வேறு குற்றவழக்கில் சம்பந்தபட்டுள்ளவர். இருவரும் சேர்ந்து பழனியை சம்பவ இடத்தில் மடக்கி பணம் . ரூ2 லட்சத்து 39ஆயிரத்தைக் கொள்ளையடித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.
அதன்பேரில் சோளிங்கர் போலீஸார் ரகு, தனா இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்..