தமிழகத்தில் 551கோயில்களில் குடமுழுக்கு: அறநிலையத்துறை அமைச்சர் தகவல்
தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் தகவல்
சோளிங்கர் யோக நரசிம்மர் கோயில் ரோப்கார் பகுதியில் பக்தர்களின் கார் நிறுத்தம் உள்ளிட்ட ரூ 11கோடி மதிப்பிலான அடிப்படை வசதிகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது..
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில், ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ,11 கோடி மதிப்பீட்டில்பல்வேறு திட்டப் பணிகளை மாநில இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் வரும் 7 மாதங்களில் 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 6 மாதத்தில்ரூபாய் 1600 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கப்பட்டு உள்ளது.
மேலும் பிரசித்தி பெற்ற 47 திருக்கோயில்களுக்கு வரைவு திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அந்த கோவில்களுக்கு பேருந்து வசதிகள், கழிவறை வசதிள், மலைப் பாதையில் உள்ள கோவில்களுக்கு மருத்துவமனைகள், மடப்பள்ளி, ரோப் கார் வசதி, தானியங்கி வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வரும் 5 ஆண்டுகளில் இந்து அறநிலையத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொழி இன ஜாதி மதங்களை கடந்து இந்து அறநிலைத்துறை செயல்பட்டு வருகிறது. மேலும் பழனி கோவிலுக்கு அடுத்தபடியாக திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே ரூ300 கோடி மதிப்பீட்டில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
சோளிங்கரில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு 53 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவிலுக்கு வரும் ஆறு மாத காலத்திற்குள் ரோப்கார் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலில் பாதுகாப்பு கருதி மூன்று மாத காலத்திற்குள்ளாக வெள்ளோட்டம் விடப்பட்டு,பின்னர் ரோப்கார் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்து அறநிலை துறை யில் உள்ள காலிப்பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகிறது குறிப்பாக அவசியம் தேவைப் படுகின்ற இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. சென்னை கபாலீஸ்வரர் கலைக்கல்லூரியில் இந்த ஆண்டு 240 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இக் கல்லூரியில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சைவ மற்றும் வைணவ வகுப்புகளில் 150 மாணவர்கள் சேர்ந்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.