உ.பி மாநில தொழிலாளர்கள் உணவு, இடமின்றி தவிப்பு: கலெக்டர் நடவடிக்கை
அகவலம் அருகே உள்ள தொழிற்சாலையில் உ.பியை சேர்ந்த தொழிலாளர்கள் உணவு இடமின்றி தவித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
ராணிப்பேட்டை மாவட்டம் ,நெமிலி அடுத்த அகவலத்தில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 22 தொழிலாளர்கள் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நிர்வாகம் கடந்த 2 மாதங்களாக அவர்களுக்கு ஊதியம் வழங்காமலும், தங்குவதற்கான இடவசதியும் செய்து கொடுக்காமல் இருந்துள்ளது. .இதனால் அவர்கள் உணவின்றியும் மற்றும் தங்க இடமில்லாமல் பரிதாபமான நிலையில் அலைந்து வந்துள்ளனர்.
இது குறித்து நெமிலி போலீஸில் புகார் அளிக்கச் சென்றனர். ஆனால் போலீசார் புகாரை வாங்க மறுத்து அவர்களை விரட்டியடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சமூக சேவை அமைப்பினர் சிலர் தகவலறிந்து அரக்கோணம் கோட்டாட்சியர் மூலமாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதிலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் வேறு வழியின்றி தொழிலாளர்கள் பட்டினியால் இடமின்றி பரிதவித்து வரும் நிலை குறித்து இராணிப்பேட்டை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து , மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் பேரில் நெமிலி வட்டாட்சியர் ரவி மற்றும் வருவாய் துறையினர் சம்மந்தபட்ட தொழிற்சாலைக்கு விசாரணை நடத்தச் சென்றனர் . அப்போது தொழிற்சாலை உரிமையாளர் வெளியூரில் இருப்பதாகவும் மறுநாள் வருவதாக கூறப்பட்டது.
எனவே திரும்பி வந்த வருவாய்த் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தொழிலாளி களுக்கு உணவிற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்நு கம்பெனி முதலாளி வந்தபின்பு முழு விசாரணை மேற்கொள்ள உள்ளதாக வட்டாட்சியர் கூறினார்.