மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி
ராணிப்பேட்டையில் மத்திய அரசு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்;
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வுவாரியம் மற்றும் வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது மத்திய அரசில் உதவி தணிக்கை அலுவலர், உதவி பிரிவு அலுவலர், வருமான வரித்துறை ஆய்வாளர், உதவியாளர் மற்றும் அஞ்சலக துறையில் உதவியாளர் போன்ற காலி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு ஆகும். வயது வரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 வயது ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் தளர்வு உண்டு.
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டி தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்