அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி கொள்ளையடித்த இருவர் சிக்கினர்
அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரத்தில் துப்பாக்கியால் சுட்டும் நடந்த கொள்ளை தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்;
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரத்தில் வயலில் தனியாக வீடுகட்டி வசித்து வரும் ஆடிட்டர் புஷ்கரன் மற்றும் அவரது தாயார், பெரியம்மா, பாட்டி ஆகியோரை கடந்த மாதம் 17 ம் தேதி இரவு மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் 25 சவரன் நகை, ரூ. 40 ஆயிரம் கொள்ளையடித்துச்சென்றனர். இது சம்பந்தமாக அரக்கோணம் டவுன் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்ட எஸ்பி தீபாசத்தியன் உத்தரவின் பேரில் 8 தனிப்படைகளை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வடக்குமண்டல ஐஜி சந்தோஷ்குமார், வேலூர் சரக டிஐஜி பாபு ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டனர்.
அதனைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் போலீசாரிடம் சிக்கினர். விசாரணையில் அவர்கள் இருவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே உள்ள வியாசபுரத்தை சேர்ந்த லோகேஷ், சின்னராசு என்பதும், கடந்த அக்டோபர் 15 ம் தேதி அரக்கோணம் அடுத்த பாலவாய் என்ற கிராமத்தில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டிலிருந்து துப்பாக்கி, லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடியுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
மேலும் திருடிய அதே துப்பாக்கியை பயன்படுத்தி புஷ்கரன் வீட்டில் கொள்ளையடித்துள்ளனர். இதனையடுத்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்து லோகேஷ்,சின்னராசு இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.