அரக்கோணம் ராம்கோ ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து
அரக்கோணத்தில் ராம்கோ சிமென்டு ஷீட் கம்பெனியில் பாய்லர் வெடித்ததில் தொழிலாளி உள்பட வடமாநில இளைஞர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.
இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர்பேட்டையில் ராம்கோ சிமென்ட் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலை சுமார் 30ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது.. அதில் 200க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர்கள் உட்பட 500க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கம்பெனியில் உள்ள ஸ்டீம் பாய்லரில் திடீரென அழுத்தக்கோளாறு ஏற்பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வசந்த், உத்தரப்பிரதேசத்தைச்சேர்ந்த முகமது ஜாவித், சர்பர் அலி, ராகுல், பங்கஜ் குமார் மற்றும் மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
உடனே அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர் . பின்னர் அனைவரையும் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மற்றும் கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில்,கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வசந்த் உட்பட 4 தொழிலாளர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விபத்து குறித்து அறிந்த அரக்கோணம் காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி கணேஷ், தொழிற்சாலைக்கு சென்று நேரில் விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, அரக்கோணம் நகர போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.