கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை- மாவட்ட ஆட்சியர் தகவல்.;

Update: 2021-11-26 14:54 GMT

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று கலெக்டர் சங்கர் லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் பேச்சு.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது: மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை 922.65 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழை அளவை விட 208.41 மி.மீ கூடுதலாகும். 1,30,585 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேளாண் பணிகளுக்கு தேவையான உரம் யூரியா 1,344 மெ.டன், டிஏபி 217 மெ.டன், பொட்டாஷ் 55 மெடன், காம்ப்ளக்ஸ் 1,727 மெ.டன் அளவில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தேவைக்கேற்ப உரங்களை விநியோகம் செய்திடவும், கூடுதல் உரங்களை இருப்பு வைத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேளாண் துறை இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் 5,206 விவசாயிகளுக்கு ரூ.2.42 கோடி பயிர் காப்பீடு இழப்பீடாக அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்கிட வேண்டும் என்ற நோக்கில் சம்மந்தப்பட்ட இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் தனிப்பட்ட முறையில் நானே தொலைபேசியில் ஆலோசித்துள்ளேன். மாவட்ட நிர்வாகம் எப்போதும் விவசாயிகளின் பக்கம் நின்று அவர்தம் நலனை உறுதி செய்திடும் வகையில் தொடர்ந்து செயல்படும். 2021-2022 ஆம் ஆண்டில் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் ரூ.150 கோடி மதிப்பில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவுத்துறையின் மூலம் இதுவரை 6426 விவசாயிகளுக்கு ரூ.34.44 கோடி அளவிலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் 2,364 விவசாயிகளுக்கு ரூ.10.11 கோடி என மொத்தம் 8,790 விவசாயிகளுக்கு ரூ.44.55 கோடி மதிப்பில் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்கள். முன்னதாக மாவட்ட ஆட்சித் தலைவர் வேளாண் பொறியியல் துறை சார்பாக பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 70 சதவித அரசு மானியத்துடன் கூடிய சூரிய மின்சக்தியால் இயங்கும் பம்ப் செட் அமைப்பதற்கான ஆணையையும், வேணாண்மைத்துறை சார்பாக இரண்டு பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களையும் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் மற்றும் வேளாண்மைத்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) உட்பட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News