கமுதி அருகே மின்னல் தாக்கி பெண் பரிதாப சாவு: இருவர் படுகாயம்
கமுதி அருகே வயலில் பருத்தி எடுத்துக்கொண்டிருந்த பெண்கள் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி; 2 பேர் படுகாயமடைந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த நெறிஞ்சிப்பட்டி கிராமத்தில் விவசாய தோட்டத்தில் பருத்தி எடுத்துக்கொண்டிருந்த போது மழை மற்றும் இடி மின்னல் தாக்கியது. அப்போது விவசாய பணியில் ஈடுபட்டிருந்த நெறிஞ்சிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகசெல்வம் மனைவி கற்பகவள்ளி (25) என்பவர் மின்னல் தாக்கியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கமுதி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்த சண்முகவேல் மனைவி அருணாச்சலம் (35), பாக்கியராஜ் மனைவி முத்துலட்சுமி (28) ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இது குறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.