3 வது வார முழு ஊரடங்கு : சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் காரணமாக முக்கிய சாலைகள் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.;
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அறிவித்து உள்ளது. அதே போல் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுப் போக்குவரத்தை நிறுத்தி அனைத்து கடைகளையும் அடைத்து முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் 3-வது வார ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு உத்தரவு ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கை கண்காணிக்க ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், 48 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகள் இன்றி வரும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு திருப்பி அனுப்படுகிறது. அதுதவிர 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 40 இருசக்கர வாகனங்கள் மூலம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடடு வருகின்றனர்.
பால், குடிநீர், மருத்துவ சேவைகள், உள்ளிட்ட அத்தியாவசிய கடைகளும், உணவகங்களும் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரம் நகரின் முக்கிய சாலைகளான திட்டக்குடி, அக்னி தீர்த்த கடற்கரை, பேருந்து நிலையம், திருக்கோவில் நான்கு ரத வீதி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு நகர் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி காணப்படுகிறது.
இன்று முகூர்த்த தினம் என்பதால் திருமண நிகழ்ச்சிகளுக்கு செல்வேரிடம் வானக சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார் திருமண அழைப்பிதழை சரி பார்த்து அதன் பிறகே அவர்களை அனுமதிக்கின்றனர். திருமண விழாக்களுக்கு செல்வோர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறறுத்தி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
மேலும் சனிக்கிழமைகளில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் மீன்பிடித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை காலை கரை திரும்புவார்கள். மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வாங்குவதற்காக தமிழகம் மட்டுமல்லாமல், கேரளா மாநிலத்தில் இருந்து அதிகமான மீன் வியாபாரிகள் ராமேஸ்வரம் துறைமுகத்திற்கு வருவது வழக்கம்.
ஆனால் இன்று முழு ஊரடங்கு என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். இதனால் இன்று பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் ஆள் நடமாட்டம் இன்றி காணப்படுகிறது.