வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
வாலிநோக்கம் அரசு உப்பு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.;
இராமநாதபுரம் மாவட்டம், வாலிநோக்கம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடலிலிருந்து வெளியேறும் உபரி நீரை பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் 50 ஆண்டுகளாக மீன்களைப் பிடித்து தங்களின் அன்றாட தேவைகளுக்கும், வாழ்வாதாரங்களுக்காக மீன்களை பிடித்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் அங்கு இயங்கி வரும் தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன திட்ட மேலாளர் கடலில் இருந்து வெளியேறும் உபரி நீரில் அப்பகுதி பொதுமக்கள் மீன்களை பிடிக்க தடை விதிப்பதாகவும், ஒப்பந்தம் எடுத்த தனி நபரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆதரவாக செயல்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனையடுத்து தமிழக அரசின் உப்பு நிறுவன திட்ட மேலாளரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக குற்றம் சாட்டி வாலிநோக்கம் தமிழ்நாடு அரசு உப்பள நிறுவன திட்ட மேலாளரை கண்டித்து, அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுபாஷ் அரசு நிறுவன திட்ட மேலாளர் மற்றும் வாலிநோக்கம் கிராமத்தை சேர்ந்த பொது மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தமிழக அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் பொதுமக்கள் தெரிவித்தனர்.