இராமநாதபுரத்தில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது: போலீசார் அதிரடி
இராமநாதபுரத்தில் காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது; கார் மற்றும் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;
இராமநாதபுரம் கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையிலான போலீசார் குற்றதடுப்பு தொடர்பாக நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இராமநாதபுரம் அம்மா பூங்கா அருகில் ஒரு புத்தம் பதிய கார் சந்தேகத்திற்கு இடமான முறையில் அங்கும் இங்கும் சென்று கொண்டிருந்தது.
இந்த காரின் மீது சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனை தொடர்ந்து காரை சோதனையிட்டபோது அதில் 10 கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரிந்தது. இந்த கஞ்சாவை வெளியூரில் இருந்து வாங்கி வந்து பொட்டலங்களாக போட்டு காரில் சென்று விற்பனை செய்தது தெரியவந்தது.
மோட்டார் சைக்கிளில் சென்று விற்பனை செய்தால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று எண்ணி நூதன முறையில் பதிவெண் இல்லாத புத்தம் புதிய காரில் வந்து அவர்கள் கஞ்சா விற்பனை செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் உத்தரகோசமங்கை அருகே உள்ள மாலங்குடியை சேர்ந்த தனசேகரன் மகன் அரசன்ராய்(வயது29), இராமநாதபுரம் பட்டணம்காத்தான் மகாத்மாகாந்திநகர் 4-வது தெரு முருகேசன் மகன் பூபாலமருது(20) என்பது தெரியவந்தது.
கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர். இவர்களில் அரசன்ராய் மீது மோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளும், பூபால மருது மீது கஞ்சா வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பரமக்குடி சிறையில் அடைக்கப்பட்டனர்.