திருஉத்தரகோசமங்கையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடக்க உள்ளது.;
இராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு நாளை தேரோட்டம் நடக்க உள்ளது. இதற்காக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டு, புதிய தேரில் சிற்பங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் புகழ் பெற்ற சிவன் ஸ்தலமான மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் கோயில் உள்ளது. சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய சிவன் கோயில் என்பதால் ஆதிசிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ஒற்றை மரகத கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டுக்கொருமுறை நடக்கும் ஆருத்ரா தரிசனம், சந்தனம் களைதல், சந்தனம் காப்பு சாத்துதல் மிகவும் பிரசித்தி பெற்றது. இதனால் இக்கோயிலுக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலம், வெளிநாடுகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயிலில் கடந்த 2 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி தூண்கள், மேற்கூரை அமைத்தல், சேதமடைந்த தூண்கள், சிற்பங்களுக்கு பண்டைய கால கட்டுமான கலவைகளான கருப்பட்டி, கடுக்காய், சுண்ணாம்பு உள்ளிட்ட இயற்கையான கட்டுமான கலவைகளை கொண்டு மராமத்து பணிகள் நடந்து வருகின்றன. கோயிலை சுற்றி நான்கு ரத வீதி உள்ளது. கோயில் ராஜகோபுரம் முன்னே உள்ள கிழக்கு பகுதியில் தேரடி மண்டபமும் ஒன்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் இங்கு தேர் திருவிழா நடந்துள்ளது அறியப்பட்டது. இதனையடுத்து இராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் மீண்டும் தேர் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. உபயதாரர்கள் உதவியுடன் திருவாரூரில் சுமார் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடந்து வந்தது. சுமார் 36 அடி உயரத்தில், 25 டன் எடையுள்ள தேரில் பொருத்தப்பட வேண்டிய சக்கரங்கள், தூண்கள், சுவாமி, அம்பாள் உருவங்கள், சிற்பங்கள் இலுப்பை மரத்தில் செதுக்கப்பட்டு பொருத்தும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நடக்கிறது. இதனையொட்டி இன்று மாலையில் தேரோட்டம் நடக்க உள்ளது. புதிய தேரில் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட மங்களேஸ்வரி, மங்களநாதர் உற்சவமூர்த்திகள் வைத்து நான்கு வீதிகளில் வலம் வர உள்ளது. இதற்காக நேற்று திவான் பழனிவேல்பாண்டியன் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் திவான் பழனிவேல் பாண்டியன், பஞ்சாயத்து தலைவர் கருங்காம்மாள்முத்து ஆகியோர் முன்னிலையில் தெரு, சாலைகள், மரங்கள், மின்வயர்கள் சீரமைக்கப்பட்டன. மேலும் பக்தர்கள், பொதுமக்கள் வசதிக்காக அன்னதானம், நீர், மோர் பந்தல்கள், கழிவறை வசதிகள், மருத்துவம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.