உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடமில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி
இராமநாதபுரத்தில் உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடமில்லாத வகையில் அரசு செயல்படும். அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.;
இராமநாதபுரம் மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடமில்லாத வகையில் இந்த அரசு செயல்படும். போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் முன்னிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரம் விநியோகம், சீரான குடிநீர் விநியோகம், காவிரி கூட்டு குடிநீர் விநியோகத் திட்ட பராமரிப்பு, வடகிழக்கு பருவமழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா மற்றும் பருவ மழைக்கால வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மின்சார விநியோகம், சாலை மேம்பாட்டுப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் எளிதில் மழைநீர் தேங்கி கூடிய தாழ்வான பகுதிகளாக 42 இடங்கள் கண்டறியப்பட்டு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. பெருமழை, வெள்ளம் போன்ற பேரிடரை எதிர்கொள்ள ஏதுவாக அனைத்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் தற்போது வரை மழை வெள்ள பாதிப்பு ஏதும் இல்லை. இருப்பினும் விழிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை பணிகளுக்கான போதிய உரம் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வந்தன. உடனடி நடவடிக்கையின் மூலம் மாவட்டத்திற்கு 1300 டன் அளவில் உரம் வரவுள்ளன. இதனை அந்தந்த பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்படும். உரத்தட்டுப்பாடு என்ற வார்த்தைக்கே இடம் இல்லாத வகையில் இந்த அரசு செயல்படும். இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் புதிய பேருந்து நிலையம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம் (இராமநாதபுரம்), கருமாணிக்கம் (திருவாடானை), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.