ராஜகண்ணப்பனை அமைச்சரவையில் இருந்து நீக்க கோரி போராட்டம்
ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க கோரி தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ கண்ணப்பன் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆனார். அமைச்சரான பின் சில முறை மட்டுமே தொகுதிக்கு வந்து சென்றார். மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு வருவதில்லை. முதல்வர் ஸ்டாலின் எச்சரித்த பின் மாவட்டத்தின் பிற பகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்தநிலையில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் ராஜேந்திரனை கடந்த 27ம் தேதி சிவகங்கையில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்து ஜாதியை குறிப்பிட்டு ஒருமையில் தரக்குறைவாக பேசியுள்ளார். அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், தவறினால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும் என தேவேந்திர குல வேளாளர் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.
இலாகா மாற்றம் திமுகவின் பித்தலாட்டமே எனக்கூறி தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தினர் இன்று முதுகுளத்தூர் தேரிருவேலி சந்திப்பு சாலையில் 1500 பேர் ஒன்று திரண்டு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராகவும் அவரது பதவியை பறிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார வளர்ச்சி அலுவலருக்கு எதிராக பேசியது குறித்து தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் செய்தி வெளியான நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் இதுகுறித்து மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன்? எனவும் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.