கமுதியில் பாஜக எப்படி வெற்றி பெற்றது? 'பகீர்' தகவல்

கமுதியில் பாஜக போட்டியின்றி எவ்வாறு வெற்றி பெற்றது என்பதை தோலுரிக்கும் ஊர்மக்கள். மத நல்லிணக்கத்தை அசைத்துப் பார்க்கும் பாஜக;

Update: 2022-02-12 13:08 GMT

தமிழகத்தின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியே இல்லாமல் பாஜக வேட்பாளர் ஒருவர் முதல் வெற்றியை பெற்றுவிட்டதாக அக்கட்சியினர் கடந்த சில தினங்களாகவே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அது கட்சி சார்பாக கிடைத்த வெற்றி அல்ல. 35 வருடமாக மதநல்லிணக்கத்தை பின்பற்றி வரும் நெறிமுறை காரணமாக கிடைத்த அங்கீகாரம் என்பது விவரமறிந்த அப்பகுதியினரின் கூற்றாக உள்ளது.

மத/சாதி மோதலை தடுக்கும் முயற்சியாக பின்பற்றப்பட்டு வரும் 35 ஆண்டுகால முறையினை தற்போது பாஜகவே மீறியிருப்பதாகவும் கூறுகின்றனர் 

35 ஆண்டுக்கு முந்தைய ஒப்பந்தம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் கடந்த 1970ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது இஸ்லாமிய மற்றும் நாடார் சமூகத்தினருக்கு இடையே கடும் போட்டி இருந்தது. நாடார் சமுதாய வேட்பாளராக செளந்திர பாண்டியன் என்பவரும், இஸ்லாமிய சமூக வேட்பாளரான முகமது இப்ராஹீம் உசைன் என்பவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் கண்டனர். இந்த போட்டி மத, சாதி பிரச்னையாக பின்னர் மாறியது. கைகலப்பு, மோதல் வரை  சென்றது. இஸ்லாமிய சமூக வேட்பாளருக்கு ஆதரவாக இருந்தார்கள் என்பதற்காக தலித் மக்களின் குடிசைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

1971ஆம் ஆண்டு முதுகுளத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவான காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி, இரு தரப்பையும் சமாதானம் செய்து வைத்தார். இதனையடுத்து அந்த ஊரில் உள்ள அனைத்து சமூகத்தினரின் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஒரு முறை நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்தவரும், அடுத்த முறை இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் தலைவராகவும், துணைத் தலைவராக செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் என சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என, அப்போது ஒருமனதாக அனைத்து சமுதாயத்தினர் முன்னிலையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அது தான், தற்போது வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 

இடையே 10 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், 1986ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஒப்பந்தத்தின்படியே 1986ஆம் ஆண்டு நாடார் சமூகத்தைச் சேர்ந்த பெரியசாமி தலைவராகவும், கிறிஸ்துவ சமூகத்தைச் சேர்ந்த வியாகுலம் பிள்ளை துணைத் தலைவராகவும் நிறுத்தப்பட்டனர்.

ஆனால், அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் நேரடியாக தலையிட்டு அதிமுக சார்பில் கந்து இக்பால் என்பவரை இரட்டை இலை சின்னத்தில் நிறுத்தினார். அப்போது, அனைத்து சமுதாய ஒற்றுமைக்கு எதிராக போட்டியிட்ட எம்.ஜி.ஆர் ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் கந்து இக்பால், டெப்பாசிட் இழக்கின்ற வகையில் அப்போது படுதோல்வி அடைந்தார் 

அன்று தொடங்கி இன்றைய தினம் வரையில் கமுதி பேரூராட்சியில் ஊர் மக்கள் கூடி தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சுயேட்சையாக களமிறங்கி போட்டியே இல்லாமல் வெற்றி பெறுவது தான் வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் மூலம் மதநல்லிணக்கம் பேணப்படுவதுடன், சாதி, மத, அரசியல் மோதல்கள் முற்றிலும் தடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் தற்போது நடைபெற்று வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கமுதி பேரூராட்சியில் இதே முறையில் தான் ஊர் மக்களின் ஒருமித்த ஆதரவுடன் 11 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் 14வது வார்டு உறுப்பினராக போட்டியின்றி தேர்வாகியிருக்கும் சத்யா ஜோதி ராஜா,  ஒருமித்த கருத்துடன் தேர்வு செய்யப்பட்டு 'சுயேச்சை வேட்பாளரராக தான் மனு செய்ய இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நெறிமுறைக்கு புறம்பாக பாஜகவின் கடிதம் கொடுத்ததால் பாஜக வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளார். இது தான் சர்ச்சைக்கு தொடக்க புள்ளியாக அமைந்திருக்கிறது. 

தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில், அப்துல் வஹாப் சகாயராணி என்பவரை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளனர். சத்யா ஜோதி ராஜா தவிர்த்து ஏனைய 10 பேரும் கட்சி சார்பாக அல்லாமல் நெறிமுறைகளை பின்பற்றி சுயேடச்சைகளாக பதிவு செய்து வெற்றி பெற்றிருக்கும் நிலையில், இந்த 35 ஆண்டுகால முறையை மீறி, கட்சியை முன்னிலைப்படுத்தி பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக கொண்டாடுவது மதநல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது என கமுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags:    

Similar News