முதுகுளத்தூர் மணிகண்டன் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்
உடற்கூறு ஆய்வு செய்த மணிகண்டன் உடலை உறவினர்கள் பெற்று சென்றனர்.;
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன் கடந்த சனிக்கிழமை மாலை வாகன சோதனையின்போது வாகனத்தை நிறுத்தாமல் சென்றதால் காவல்துறையினர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னர் காவல் நிலையத்தில் இருந்து வீடு சென்ற மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதனால் மாணவர் மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால் உடலை அதனை உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டும் என மணிகண்டன் தாயார் ராமலட்சுமி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன், புதன்கிழமை காலை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் முன்னிலையில் மறு உடற்கூறு ஆய்வு செய்து அதனை முழுமையாக வீடியோ பதிவு செய்து நீதிமன்றத்தில் உடற்கூறு ஆய்வு அறிக்கையை ஒரு மணி நேரத்தில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று காலை உறவினர்கள் பெற்றோர்கள் என அனைவரும் உடற்கூறு ஆய்வு செய்வதற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வந்தனர். ஆனால் உறவினர்கள் தரப்பில் மருத்துவர் சரவணன் மற்றும் உறவினர் ஒருவரை உடற்கூறு ஆய்வு செய்யும் போது உடன் இருக்க அனுமதி அளிக்குமாறு கேட்டனர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் டாக்டர் சரவணன் உடற்கூறு ஆய்வு செய்யும்போது உடன் இருப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்கிய உடற்கூறு ஆய்வு முதலில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள எக்ஸ்ரே அறையில் முழுமையாக மணிகண்டன் உடல் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது பின்னர் 3 மணிக்கு மேல் உடற்கூறு ஆய்வு துவங்கப்பட்டு தொடர்ந்து 2 மணி நேரம் உடற்கூறு ஆய்வு செய்து முடிக்கப்பட்டது.
மணிகண்டனின் மறு உடற்கூறு ஆய்வு அறிக்கை இரண்டு நாட்களுக்கு பின் வழங்கப்படும் என மருத்துவத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது இதனால் உடலை பெற்றுக் கொள்ளுமாறு போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.
ஆனால் உறவினர்கள் உடற்கூறு அறிக்கையை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றம் வழங்க வேண்டும் என கூறியுள்ள நிலையில் காலதாமதம் செய்ததால் உடலை வாங்க மறுத்து, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன் முன் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.
பின்னர் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தயையடுத்து உடற்கூறு ஆய்வு செய்த உடலை அமரர் ஊர்தியில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் உடல் ஒப்படைக்கப்பட்டு சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் அதிகமானோர் கூடியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்காக போலிசார் குவிக்கப்பட்டனர்.