மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள்
மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே தெற்குப்பட்டி தோளூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தர்மர்51, கூலித்தொழிலாளி. இவரது மனைவி பஞ்சவர்ணம்45, ஒரு மகன், 5மகள்கள் உள்ளனர்.
மனைவி நடத்தையின் மீது சந்தேகம் அடைந்த தர்மர் கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி வீட்டிலிருந்த பஞ்சவர்ணத்தை மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். உடல் எரிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பஞ்சவர்ணம் அன்று இரவு உயிரிழந்தார்.
மேலும் சாகும் முன் உடலில் மண்ணெய் ஊற்றி தீ வைத்தது கணவர் தர்மர் என வாக்குமூலம் அளித்துள்ளார். பஞ்சவர்ணம் புகாரின் அடிப்படையில் அபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவர் தர்மரை கைது செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் தீர்ப்பை மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி ஏ.சுபத்ரா வழங்கினார். அதில் குற்றவாளியான தர்மருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளார். அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் கீதா வாதாடினார்.