குடும்ப தகராறில் மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை

கமுதி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-09-27 11:36 GMT

ஆயுள் தண்டனை பெற்ற முத்துக்குமார்.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காத்தழகு கருப்பணன் மகன் முத்துக்குமார் (வயது26). இவரின் மனைவி ராணி என்ற அமுதராணி(24). முத்துக்குமார் அடிக்கடி குற்ற வழக்குகளில் சிறை சென்று வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி முத்துக்குமார் மனைவியை சைக்கிளில் சந்தைக்கு செல்லலாம் என்று அழைத்து சென்றுள்ளார். கமுதியில் இருந்து பெருமாள் தேவன்பட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தபோது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த முத்துக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மனைவி அமுதராணியை குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக அமுதராணியின் தந்தை திருச்சுழி அம்மன்பட்டியை சேர்ந்த பூமிநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் கமுதி போலீசார் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி சுபத்ரா மனைவியை கொலை செய்த முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

Tags:    

Similar News