கடலாடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாபெரும் மாட்டுவண்டி பந்தயம்
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே கோவில் திருவிழாவையொட்டி மாபெரும் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.;
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகேயுள்ள திருஆப்பனூர் தெற்கு கோட்டை கிராமத்தில் ஸ்ரீஜெயமங்கள விநாயகர், ஸ்ரீபர்மா பீலிக்கான் முனிஸ்வரர் கோவில் 12ம் ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
பெரியமாடு பந்தயத்தில் 15 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இந்தப்போட்டிக்கு 10 கிலோமீட்டர் தூரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. சின்ன மாடு பந்தயத்தில் 16 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. அதே போன்று சின்ன மாடு பந்தயத்திற்கு ஆறு கிலோமீட்டர் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்த மாடுகளுக்கும் சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இரண்டு பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் சாரதிகளும் பங்கேற்றனர். இந்த மாட்டு வண்டி போட்டியை காண கடலாடி, முதுகுளத்தூர் மற்றும் சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பார்வையாளர்கள் வந்திருந்து கண்டு ரசித்தனர்.