இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்த கீழக்கரை பள்ளி மாணவன்
இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்த பள்ளி மாணவன், இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுப்பதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் இம்பாலா சுல்தான். இவருடைய மகன் இன்சாப் முகமது ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சிறுவயதில் இருந்து தண்ணீரில் அதிக நேரம் மிதந்து சுயமாகவே பயிற்சி எடுத்துள்ளார்.
இதன் மூலம் இவர் நீச்சல் போட்டியில் கலந்துகொள்ள தனது தந்தையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனைyfதொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திற்கு தன்னுடைய புதிய யோகா நீச்சல் சாதனையை செய்து காட்டினார். இவர் ஒரு மணி நேரம் 15 நிமிடம் 14 வினாடிகள் யோகநிலையில் தண்ணீரில் மிதந்து புதிய சாதனையை செய்தார்.
இதற்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர், ஒரு நிமிடம் தண்ணீரில் மிதந்து சாதனை செய்த முயற்சியை முறியடித்துள்ளார். இதை அறிந்த ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் நேரடியாக அழைத்து இளம் சாதனையாளர் விருது வழங்கி பாராட்டினார்.
மேலும் மாணவரின் சாதனையை பாராட்டும் வகையில் அவருக்கு கபீர் சக்ரா விருதுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கர்லால் குமாவத் பரிந்துரை செய்தார். மேலும் இவருடைய சாதனையை 18 நாடுகளைச் சேர்ந்த ஏசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்க்கு இந்தியாவின் சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான விருது வாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளார்.
வரும் காலத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெற்று இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் வென்று கொடுப்பதே இவருடைய லட்சியம் என்று தெரிவித்தார். இவரின் சிறுவயது சாதனை முயற்சியை அறிந்த கீழக்கரை ராமநாதபுரம் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பல்வேறு மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.