தொடர் மின்வெட்டு காரணமாக கீழத்தூவல் பகுதி விவசாயிகள் அவதி

இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக நீர் பாசனம் செய்ய முடியாமல் 3 ஆயிரம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது;

Update: 2022-04-07 04:45 GMT

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல், சாம்பக்குளம், கேளல், அப்பனேந்தல் ,மகிண்டி, உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தற்பொழுது பருத்தி, மிளகாய் போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளனர். 

விவசாயிகள் நெல்லுக்கு அடுத்தபடியாக பருத்தி, மிளகாய் சாகுபடி செய்துள்ள சூழ்நிலையில் அவர்கள் தற்பொழுது கிணற்று நீர் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

முதுகுளத்தூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் சூழ்நிலையில் அந்த பகுதியில் தொடர் மின்வெட்டு காரணமாக நீர்பாசனம் செய்ய முடியாமல், மிளகாய், பருத்தி செடிகள் அனைத்தும் வெயிலில் வாடுகின்றன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு எந்த விதமான மின் தடை ஏற்படவில்லை எனவும் தற்போது திமுக ஆட்சியில் தொடர்ந்து மின்தடை ஏற்படுவதால் மின் மோட்டார்கள் மற்றும் வீட்டில் பயன்படுத்தக்கூடிய வீட்டு உபயோக பொருட்கள் அடிக்கடி பழுதாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஆகையால் விவசாயிகளின் நலன் கருதி கீழத்தூவல், சாம்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதலாக ட்ரான்ஸ்பார்மர் அமைத்து அப்பகுதி மக்களுக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News