தலைக்குமேல் ஆபத்தில் துணை சுகாதாரநிலையம்: தேவை உடனடி 'சிகிச்சை'
இடிந்து விழும் நிலையில் உள்ள துணை சுகாதார நிலையத்தில், சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பரிதவிக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைகுளம் கிராமத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வந்துள்ளது. இந்த துணை சுகாதார நிலையத்தில் தினைகுளம், முத்திவலசை, பஞ்சங்தாங்கி, மொங்கான் வலசை, வேதகரைவலசை, வேதலோடை, களிமண்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்து வந்தனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதம் அடைந்து மேற்கூரை பெயர்ந்து, எப்ப வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அங்கு சென்று செவிலியர்கள் தங்கி பணியாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவ்வப்போது விஷக்கடி, கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அவசர தேவைக்காக சிகிச்சை பெற, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இராமநாதபுரத்திற்கு செல்லவேண்டி உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அவ்வப்போது கிராமத்திற்கு வரும் செவிலியர், தெருவோரம், மரத்தடியில் இருந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாக அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த துணை சுகாதார நிலையத்தை இடித்து, புதிதாக துணை சுகாதார நிலையம் கட்டி கொடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.