இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கார் மோதி ஆடு மேய்ப்பவர் உயிரிழப்பு
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் தொண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார்;
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கார் மோதி ஆடு மேய்ப்பவர் உயிரிழந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள சோழியக்குடி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து (55) ஆடு மேய்த்து வருகிறார். நேற்று காளிமுத்து கிழக்கு கடற்கரை சாலை அருகே உள்ள சோழியக்குடி வயல்காட்டு பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு சாலையோரமாக நடந்து சென்றார். அப்போது தொண்டி நோக்கிச் அதிவேகமாக சென்ற கார் காளிமுத்து மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச்சென்று தொண்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற தொண்டி போலீஸார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், காரை ஓட்டி வந்தவர், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா, கீழப்பனையூர் அருகே உள்ள வெட்டுகாடைச் சேர்ந்த பெரியகருப்பன் மகன் செளந்தர பாண்டியன் (43) என்பதும், இவர் தனது உறவினர்களுடன் இராமேஸ்வரத்தில் சுவாமி கும்பிட்டுவிட்டு ஊருக்கு திரும்புகையில் விபத்து நேரிட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த தொண்டி போலீஸார் கார் ஒட்டுநர் செளந்திரபாண்டியனை கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இவருக்கு பஞ்சு என்ற மனைவியும் ஈஸ்வரி, ஊர்வசி என இரண்டு மகள்கள் உள்ளனர்.