கமுதியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்.
கமுதியில் தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் நோய் பரவும் அபாயம். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியான முத்துமாரியம்மன் நகரில் தெருக்களில் கழிவுநீா் குளம்போல் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கமுதி முத்துமாரியம்மன் நகரிலிருந்து பேரூராட்சி அலுவலகம் வழியாக கழிவுநீா் வெளியேறும் வகையில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கழிவுநீா் கால்வாய் மற்றும் சாலைப் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் கழிவுநீா் கால்வாய் முறையான திட்டமிடல் இன்றி அமைக்கப்பட்டதால் மழைநீா் மற்றும் கழிவுநீா் மீண்டும் முத்துமாரியம்மன் நகருக்குள் திரும்பிச் சென்று சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கழிவுநீரை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது கழிவுநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் குளம் போல் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், மழைக்காலங்களில் கழிவு நீருடன் கலந்து வீடுகளுக்குள் செல்வதால் பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.