இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த 7 டிப்பர் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநர்கள் 7 பேரை கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே மண்டல மாணிக்கம் குண்டாறு பகுதிகளில் அனுமதியின்றி சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கமுதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கமுதி போலீசார் குண்டாறு, மலட்டாறு, கமுதி கோட்டைமேடு, பசும்பொன், கிளாமரம், மண்டலமாணிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மண்டலமாணிக்கம், குண்டாறு பகுதிகளிலிருந்து அனுமதியின்றி ஆற்று மணலை ஏற்றி வந்த 7 லாரிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது முறையான அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மணல் லாரிகளை கமுதி போலீசார் பறிமுதல் செய்து, 7 லாரி டிரைவர்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.