முன்னேற விழையும் மாவட்டங்கள்: ராமநாதபுரத்தில் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் "முன்னேற விழையும் மாவட்டங்கள்" திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசுவாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இராமநாதபுரம் மாவட்டத்தில் குழந்தைத் திருமணம், இரத்தசோகை பாதிப்பு ஆகியவை அதிகமாக உள்ளதாகவும், இதை தடுக்க பொதுமக்களிடையே வல்லுனர் குழுக்கள் நேரிடையாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், குறிப்பாக பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 90 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார். இராமநாதபுரம் மாவட்டக் குடிநீர் மற்றும் பாசன வசதிக்காக, நிரந்தர செயல் திட்டத்தினை வகுத்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.