தான்சானியா நாட்டில் செம்மை நெல் சாகுபடி பயிற்சி அளித்த தமிழக விஞ்ஞானிகள்

பயிற்சியில் தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.;

Update: 2023-03-23 10:15 GMT

பாத்தி நடவு முறை குறித்து தான்சானியா நாட்டு விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கும் தமிழக விஞ்ஞானிகள்

தான்சானியா நாட்டின் விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் விவசாய அலுவலர்களுக்கு செம்மை நெல் சாகுபடி மற்றும் கிராம அறிவு மையம் பற்றிய பயிற்சி தான்சானியா நாட்டில் நடைபெற்றது.

நார்வே நாட்டு உதவியுடன் தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவனம் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற மேம்பட்ட இடுப்பொருட்கள் பயன்பாடு உள்ள நெல் உற்பத்தி முறை (Climate smart and Resource efficient rice production ) திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.

இத்திட்டத்தில் செம்மை நெல் சாகுபடி எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மாதிரி கிராம அறிவு மையம் மற்றும் பயிர் மருத்துவ முகாம் ஆகியவைகள் பற்றிய பயிற்சி மொராக்கரோவில் நடைபெற்றது.இப்பயிற்சியில் எம்.எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் பேராசிரியர் சுவாமிநாதன் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் தமிழ்நாட்டில் செம்மை நெல் சாகுபடி எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றது. பாய் நாற்றங்கள் தயாரித்தல், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை, காய்ச்சலும் பாய்ச்சலும் அடங்கிய நீர் பாசன முறை, பச்சை வண்ண அட்டையை பயன்படுத்தி நுண்ணூட்ட சத்து மேலாண்மை ஆகியவைகள் உள்ளிட்ட களப்பயிற்சி. மேலும் கிராம அறிவு மையங்களை மக்கள் ஒத்துழைப்புடன் எவ்வாறு அமைப்பது,

விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை மேம்படுத்த கிராம அறிவு மையங்கள் எவ்வாறு உதவ முடியும், விவசாயிகளுக்கு உடனுக்குடன் தகவல் கொடுக்க தகவல் தொழில்நுட்ப சாதனங்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பயிர் மருத்துவ முகாம் செயல்பாடு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.

பயிற்சியில் தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் உள்ளிட்ட 60 அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.பயிற்சி முகாமை தான்சானியா விவசாய ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஜெஃப்ரி ம்காமிலோ பயிற்சி முகாமை தொடங்கி வைத்து உரையாற்றினார்.நார்வே நாட்டைச் சேர்ந்த திட்ட இயக்குனர் உதயசேகர் நாக்கோத் சிறப்புறையாற்றினார். மொராக்கரோ, இரிங்கா மற்றும் எம்பயா ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த விவசாய நிலங்களுக்குச் சென்று நேரடியாக விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயணம் பற்றி எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் கூறியதாவது: இப்பயணம் ஒரு மிகச் சிறந்த அனுபவத்தை தந்துள்ளது. சாலை வழியாக சுமார் 3000 கிலோமீட்டர் பயணம் செய்தோம். இந்தியாவில் இருந்து மார்ச் 11 -ஆம் தேதி புறப்பட்டோம். 22- ஆம் தேதி வரை தான்சானியா நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 நாட்கள் பயணம் சென்றோம். தான்சானியா நாட்டின் விவசாயம், கலாசாரம் வாழ்க்கை முறை போன்ற பல்வேறு விவரங்களை அறிய பயிற்சி நல்ல வாய்ப்பாக அமைந்தது.தான்சானியா நாட்டின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இங்கு பயிரிடப்படும் முக்கிய பயிர் மக்காச்சோளம். மொத்த சாகுபடி பரப்பளவில் சுமார் 50% பரப்பில் மக்கா சோளம் பயிரிடப்படுகிறது.

நாட்டின் எப்பகுதிக்கு சென்றாலும் ஆங்காங்கே மக்காச்சோள பயிர்களை பார்க்க முடியும். நம் ஊரில் உள்ள வீட்டு தோட்டத்தை போல் அனைத்து வீடுகளிலும் மக்காச் சோளத்தை காணமுடிந்தது.மேலும், நெல், கோதுமை, சர்க்கரைவள்ளி கிழங்கு, வாழை, கரும்பு ஆகிய பயிர்கள் இங்கு சாகுபடி செய்யப்படுகின்றது. காபி, பருத்தி, முந்திரி, புகையிலை ஆகிய பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

எங்கு சென்றாலும் அதிக அளவில் மரங்களை காணமுடிந்தது. மரங்கள் இந்நாட்டின் வருமானத்திற்கு முக்கிய காரணியா கவும் உள்ளது. தான்சானியா மக்களின் முதன்மை வாழ்வாதாரம் விவசாயம். கால்நடை வளர்ப்பு மற்றும் மரம் வளர்ப்பு மூலம் கனிசமான வருமானம் பெறுகின்றனர். விவசாயத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கூலி தான். வேலையின் அடிப்படையில் கூலியில் பாகுபாடு கிடையாது என்பது பாராட்டத்தக்க ஒன்றாகும் என்றார் ராஜ்குமார்.

Tags:    

Similar News