சந்திராயன் 3. விண்வெளி ஆய்வில் முக்கிய இடம் பிடிக்கும்: த.வி.வெங்கடேஸ்வரன்
நிலவில் மேல்பரப்பில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஹீலியம் 3 என்ற ஐசோடோப்புவை ஒரு டன் எடுத்து வந்தால் போதும் என்றார்.;
மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தால் சந்திரான் 3 விண்வெளி ஆய்வில் முக்கிய இடத்தை வகிக்கும் என்றார் தில்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை ‘நிலவில் குடிபோகும் காலம்’ என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது:
விண்வெளி குறித்த ஆய்வுகள் நம்மைப் போன்ற ஏழை நாடுகளுக்கு அதிகமான நிதிச்சுமையை ஏற்படுத்தும் என கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். கடந்த வருடம் தீபாவளிப் பண்டிகைக்கு நாம் வெடித்த வெடிகளுக்கான மொத்தச் செலவு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி. இந்தத் தொகையிலிருந்து 8 சந்திராயன் விண்கலன்களை அனுப்ப முடியும். ஓராண்டுக்கு இந்தியர்கள் சிகரெட், பீடிக்காக செலவு செய்யும் தொகை மொத்தம் ரூ. 1.2 லட்சம் கோடி. இந்தத் தொகையில் 2,500 சந்திராயன்களை விண்வெளிக்கு அனுப்ப முடியும். விண்வெளி ஆய்வுக்காக நாம் செலவு செய்யும் தொகை ஒப்பீட்டளவில் பெரிய தொகை அல்ல.
கல்வி, ஆராய்சி உள்ளிட்டவைகளுக்கு அரசினால் ஒதுக்கப்படும் தொகை செலவு அல்ல. அது முதலீடு. நிலவில் கிடைக்கும் கனிம வளங்களைக் கவனத்தில் கொண்டால், அது பெரும் முதலீடு என்பதைப் புரிந்து கொள்ளலாம். சர்வதேச சட்டத்தின்படி, இயற்கையில் கிடைக்கும் கனிமவளங்கள் அத்தனையும் மனிதகுல மேம்பாட்டுக்குப் பயன்படுத்தும் பொதுச் சொத்து. யாருடைய தனிச்சொத்தும் கிடையாது.
நிலவில் மேல்பரப்பில் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட ஹீலியம் 3 என்ற ஐசோடோப்புவை ஒரு டன் எடுத்து வந்தால் போதும். அது இந்தியாவின் மொத்த ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய உதவும். இதுபோல இன்னும் பல கனிமவளங்கள் அங்கே கிடைக்கின்றன. இதற்காகத்தான் பல நாடுகளும் நிலவுக்கு செல்ல முயற்சிக்கின்றன.
சர்வதேச அளவில் அமெரிக்கா, ரஷியா, சீனா போன்ற நாடுகள் தொடர்ந்து நிலவுக்கு செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகள் தோல்வியைத் தழுவியிருக்கின்றன. தற்போது நிலவுக்குச் சென்றிருக்கும் இந்தியாவின் சந்திராயன் 3 பல்வேறு வகையில் மேம்படுத்தப்பட்ட விண்கலமாகும். நிலவின் அந்த விண்கலம் இறங்கும் 3 நிமிடங்களில், எதிரே உள்ள பள்ளங்கள், மேடுகளைப் அதி வேகமாகப் படம் எடுத்து செயற்கை நுண்ணறிவின் மூலம் முடிவெடுக்கும் வகையில் கணினிகள் வடிவமைக்கப்படள்ளன.
நிலவின் தரையிலுள்ள குழிகளைப் படம் எடுப்பது, திடீரென விழுந்து சேதமடையாமல் இருக்க மெதுவாக இறக்கும் தொழில்நுட்பம், நொடிக்கு 2 மீட்டர் வேகத்தில் இறங்கும்போது சேதமடையாமல் இருக்க விண்கலத்தின் கால்கள் உறுதியாக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பம் போன்றவை பல வகைகளில் சந்திராயன் 3 மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவில் உரிமை கொண்டாடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முக்கியமான நாடாக விளங்கும் என்றார்.