பொற்பனைக்கோட்டை- தடாதகைக் கோட்டை: கட்டவிழும் வரலாற்றுப் புதிர்கள்

தடாதகைக்கோட்டை மற்றும் பொற்பனைக்கோட்டை பற்றி அறிந்து கொள்ள இத்திடலில் அரசு தொல்லியல் அகழாய்வு நடத்தவேண்டும்.

Update: 2023-06-03 07:45 GMT

பொற்பனைக்கோட்டை (கூகுள் படம்)

புதுக்கோட்டை மாவட்டம் முறையான விளக்கத்தை வெளிக்கொணர முடியாத பல தொண்மையான தொல்லியல் தடயங்களை கொண்டுள்ளன. அவற்றில் 21 நாடுகளும் 21 கோட்டைகளும் அடங்கும். 21 நாடுகள் மற்றும் 21 கோட்டைகளின் பட்டியல் சான்றெண் விளக்கத்தில் தரப்பட்டுள்ளன .

பெரும்பாலான கோட்டைகளை யார் கட்டினார்கள், எக்காலத்தைவை என்பதற்கு முறையான சான்றுகள் இல்லை. அவற்றில் காலத்தால் மிகவும் முற்பட்டவைகளாக கருதப்படுபவை தடாதகைக்கோட்டையும் பொற்பனைக்கோட்டையும் ஆகும்.

குறிப்பாக இவ்விரு கோட்டைகளின் அடையாளங்களை வெளிக்கொணருவதும் அவற்றின் காலத்தை கணக்கீடு செய்வதும் வரலாற்று ஆய்வாளர்களுக்கு மிகப்பெரும் சவால்களாக உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகாவில் உள்ள செங்கீரைக் காட்டுக்குள் தடாதகைக்கோட்டையும் புதுக்கோட்டையிலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் – ஆலங்குடி தாலுகாவில் திருவரங்குளத்தின் அருகே உள்ள வேப்பங்குடி கிராமத்தில் பொற்பனைக்கோட்டையும் அமைந்துள்ளன.

கே.ஆர்.வெங்கடராம அய்யர் தான் எழுதிய புதுக்கோட்டை சமஸ்தான மேனுவலில் (1944) மதுரை மீனாட்சியின் பெயரான தடாதகையின் பெயரால் அமைந்த அவளுடைய கோட்டை செங்கீரையில் இருப்பதாக உறுதி செய்துள்ளார். எனினும் தொடர்ந்து இது உறுதிப்படுத்தப்படாத தொல்லியல் தடயமாகவே இருந்து வருகின்றது.தடாதகையானவள் மீனாட்சியின் அவதாரம் என்பது திருவிளையாடற்புராணத்திலே தரப்பட்டுள்ள தகவலாகும் . இதைத்தவிர தடாதகைக்கோட்டை பற்றி எழுதப்பட்டுள்ள வேறு சான்றுகள் இல்லை.

வேப்பங்குடியில் பொற்பனைக்கோட்டை ஒரு தொல்லியல் தடயமாக அமைந்திருக்கின்றது என்பதை காப்பாட்சியர் ரகுபதி நன்றாகவே பதிவு செய்துள்ளார். பொற்பனைக்கோட்டையின் காலத்தையோ, வரலாற்றுப் பின்னணியையோ அவர் காட்டவில்லை. எனினும் அவருடைய பதிவுகள் இந்த ஆய்வுக்கட்டுரையை எழுதப்பேருதவியாக உள்ள பல தகவல்களைத் தந்துள்ளன.

பேராசிரியர் இனியன் அவர்களால் பொ. ஆ. 2021-ல் முதல்கட்ட அகழாய்வு செய்யப்பட்ட பின்பும் பொற்பனைக்கோட்டையின் வரலாறு தொடர்ந்து புதிராகவே நீடித்து வருகின்றது. பொற்பனைக்கோட்டை வளாகத்தில் விலைமதிப்பு மிக்க பொன் புதைந்திருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் உள்ளுர் மக்கள் ஒரு பக்கம்.

இதுவரை இல்லாத ஒரு புதிய முயற்சியாக மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள ஒரு சில பாண்டியஇ சோழ மன்னர்களின் பெயர்களையும் திருவரங்குளம், வல்லம் ஸ்தல புராணங்க ளையும், திருவிளையாடற் புராணத்தையும் கருத்தில் கொண்டு தடாதகைக்கோட்டை மற்றும் பொற்பனைக்கோட்டை ஆகியவற்றிற்கு சில வரலாற்றுப் பின்புலம் உள்ளன என்பதை இந்தக் கட்டுரை வாயிலாக வாசகர்களுக்கு தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

திருவரங்குளம், வல்லம் ஸ்தலபுராணங்களில் இடம் பெற்றுள்ள சில நிகழ்வுகள் வரலாற்றுக்குகந்ததாகக் கருதி கே.ஆர்.வெங்கடராம அய்யரும், என்.தியாகராசனும், காப்பாட்சியர் ரகுபதியும் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். திருவிளையாடற்புராணத்தில் சைவ சமயக் கடவுளான சிவனின் திருவிளையாடல்கள் விவரித்துச் சொல்லப்பட்டி ருக்கின்றன. அதே நேரத்திலே அதில் சொல்லப்பட்டிருக்கின்ற வரலாற்றுக்குகந்த தகவல்களை மறுதளித்துவிடமுடியாது.

பழங்கால வடஇந்திய வரலாற்றை எழுத மகாபாரதம் ஒரு அடிப்படைச் சான்றாக கையாளப்பட்டிருக்கும் வேளையில், தென்னிந்திய வரலாற்றை எழுத எத்தனிக்கும் பொழுது அதைப் புறந்தள்ளிவிட்டிருக்கின்றார்கள்.வரலாற்றாசிரியர்கள். வடஇந்திய வரலாற்றை எழுத பல வரலாற்றுத் தகவல்களைத் தருகின்ற மகாபாரதம் தென்னிந்திய வரலாற்றை எழுதவும் சில தகவல்களைத்தரும் என்ற வாதத்தின் அடிப்படையில் இக்கட்டுரை துணியப் பட்டுள்ளது.

பாண்டியர்களுக்கும் மகாபாரதத்திற்கும் உள்ள தொடர்புகள் பலப்பல. அவை எல்லாம் இங்கு கையாளப்படவில்லை. தடாதகைக்கோட்டை மற்றும் பொற்பனைக்கோட்டை ஆகியவற்றின் வரலாற்றுப் பின்னணியையும் அதன் காலத்தையும் முடிவு செய்ய மகாபாரதத்தின் பங்களிப்பு மிகவும் அவசியப்பட்ட நிலையில் அது ஒரு தவிர்க்கமுடியாத சான்றாகக் கையாளப்பட்டிருக்கின்றது. முதலில் செங்கீரையில் உள்ள தடாதகைக்கோட்டையைப் பற்றி விளக்கிவிட்டு பின்னர் வெப்பங்குடியில் உள்ள பொற்பனைக்கோட்டைக்கு விளக்கமளிக்கலாம்.

அ. செங்கீரையில் தடாதகைக்கோட்டை வெள்ளாற்றங்கரை யிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் செங்கீரை என்னும் சிற்றூர் உள்ளது. இது வெள்ளாற்றின் தென்பகுதியில் இருப்பதால் பாண்டிய நாட்டிற்குட்பட்ட திருமயம் வருவாய் கிராமங்களில் ஒன்றாகும். பழங்காலத்தில் இக்கிராமத்தில் ”காராள வெள்ளாளர்” வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த ஊரிலிருந்து அரிமழம் செல்லும் சாலையில் ”தடாதகை வனம்” என்ற காட்டுப்பகுதியில் தடாதகைக்கோட்டையின் அழிவுகள் ஒரு வட்டவடிவிலான கோட்டை இருந்ததற்கான அடையாளமாகக் காணப்படுகின்றது. இதன் பாரம்பரியப் பெயர் தடாதகைக்கோட்டை என்று பொதுமக்கள் வழங்கி வருகின்றனர். இதை கே.ஆர்.வெங்கடராம அய்யரும் குறிப்பிடுகின்றார்.

“கோட்டைக்கரை“ என்று அழைக்கப்படும் இந்த மண்கோட்டையின் அழிவுகள் வனத்துறையின் பட்டிக்கிடங்கு தொகுப்பைச் சேர்ந்தது என்றும் அவருடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் . கோட்டைக்கரை அல்லது தடாதகைக் கோட்டை எனப்படும் மண்கோட்டையானது உண்மையில் ஒரு அழிந்தபோன கோட்டையின் தொல்லியல் மேடாகும்.இந்தக் கருத்தை மறுப்பதற்கில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக இந்த சிதைவுண்ட கோட்டைக்கரையின் சரிவுகளில் 1.25 அடி நீளம், அரை அடி அகலம், நான்கு அங்குளம் கனம் ஆகிய அளவுகளுள்ள செங்கற்களைக் கொண்ட சுவரின் சிதைவுகளும் சரிந்துகிடந்தன. தற்போது அவையெல்லாம் காணாமல் போயுள்ளன.

எனினும் கோட்டைக்கரையின் சரிவுகளில் இன்னும் இவ்வகைச் செங்கற்கள் புதைந்துள்ளன. இங்கு கிடைக்கும் செவ்வக வடிவ செங்கற்கள் கீழடி, பொற்பனைக்கோட்டை ஆகிய இடங்களில் கிடைத்துள்ள செங்கற்களை ஒத்துள்ளன. இங்கு கிடைக்கும் சிதைவுண்ட சுவரின் செங்கற்களுடன் சுண்ணாம்பு பூச்சுகளும் காணப்படுகின்றன.

சுமார் இரண்டு ஏக்கர் நிலப்பகுதிகளைக் கொண்ட இந்த வட்டவடிவிலான கோட்டையின் கிழக்குப் புறத்தில் நுழைவாயில் இருந்தது. இந்த நுழைவாயிலில் அடுக்கடுக்காக சிதைவுண்டிருந்த செங்கற்கள் கடைசியாக பத்தாண்டுக ளுக்கு முன்பு கொள்ளைபோயுள்ளன. சரியாகப் பாதுகாக்கப் படாமையால் சிதைவுண்ட கட்டுமானப்பொருட்கள் காலங்காலமாகக் கொள்ளைபோயுள்ளன.

இவை பாதுகாக்கப்படவேண்டிய நினைவுச் சின்னங்கள். கோட்டையின் வடகிழக்கு மூலையில் வடக்குச் சுவரில் கொத்தளம் இருந்ததற்கான அடையாளத்தைக் காணலாம். வடக்கிலும் கிழக்கிலும் மேலும் சில கொத்தளங்கள் இருந்துள்ளன. நேரில் ஆய்வு செய்தால் இது விளங்கும்.

வடபுறத்தில் அகழி இருந்ததற்கான அடையாளத்தை தற்போதுள்ள நீண்ட பள்ளம் உறுதிப்படுத்துகின்றது. கோட்டையின் வடக்குச் சுவர் செம்புராங்கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. திருவிளையாடற்புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தடாதகைக்கோட்டை கற்பனையா னவை அல்ல. இங்கு கிடைப்பது வரையறுக்கப்பட்டுள்ள தொல்லியல் விதிகளுக்குட்பட்ட முழுத்தகுதியுடைய தொல்லியல் சான்றுகளாகும்.

இவற்றிற்கான பின்புலத்தை புராணத்தில் தேடினால் அது தவறாகாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திருவிளையாடற் புராணத்தில் சொல்லப்பட்டுள்ள தடாதகைப்பிராட்டியானவர் முழுமையான கற்பனைப்பாத்திரம் இல்லையென்பது உறுதி.புராணக்கூற்றின்படி, மலையத்வஜ பாண்டியனும் அவனுடைய மனைவி காஞ்சனமாலையும் தங்களுக்கு ஒரு மகன் வேண்டி சிவனை நோக்கி யாகம் வளர்த்தனர். யாகத்தின் பயணாக ஒரு பெண் குழந்தை தோன்றினாள். அவள் பெயர் தடாதகை.

அதன்பிறகு இவள் மதுரை மீனாட்சியாக அவதாரம் எடுக்கிறாள். பாண்டியர் தங்களது பழைய வரலாற்றை மறந்துவிடக்கூடாது என்பதற்காக அதை புராணத்துடன் சேர்த்து எழுதியுள்ளனர். தடாதகையின் தந்தை மலையத்வஜ பாண்டியன் மகாபாரதத்திலும் குறிக்கப்படுகின்றான்.

திரௌபதியின் சுயம்வரம் நிகழ்ச்சியில் பாண்டிய மன்னன் ஒருவனும் கலந்து கொண்டான் என்று மகாபாரதம் குறிப்பிடுகின்றது. மலையத்வஜ பாண்டியனின் தந்தை சாரங்கத்வஜ பாண்டியன் என்றும் இவன் பாரதப்போரில் பாண்டவர் பக்கம் நின்று போரிட்டான் என்றும் பாரதம் குறிப்பிடுகின்றது.

அது மட்டுமல்ல. சாரங்கத்வஜ பாண்டியனின் தந்தை தர்ஷக் பாண்டியன் குருச்சேத்திரப் போரில் கலந்து கொண்டான் என்றும் அது விவரிக்கின்றது. இவற்றின் மூலம், தர்ஷக் பாண்டியன், சாரங்கத்வஜ பாண்டியன், மலையத்வஜ பாண்டியன், தடாதகை ஆகியோர் முதுபழங்காலத்திய பாண்டிய வம்ச உறுப்பினர்கள் என்று அறியப்படுகின்றனர்.

சாரங்கத்வஜ பாண்டியன் கிருஷ்ணரால் தோற்கடிக்கப்பட்டி ருக்கின்றான். மலையத்வஜ பாண்டியனுக்குப்பிறகு அதிகாரத்திற்கு வந்த தடாதகை தனது கோட்டையை தடாதகைக்கோட்டை என்று பெயர் மாற்றிக்கொண்டுள்ளாள். இதிலிருந்து அறியவரும் உண்மையாவது, தடாதகைக் கோட்டையானது மகாபாரதக்காலத்தைச் சேர்ந்தது என்பதாகும்.

செங்கீரையில் உள்ள தடாதகைக்கோட்டையானது பாண்டியர்களின் மணலூர் கோட்டைக்கு முந்தியது என்பதாகும். மகாபாரதத்தின் காலம் எது என்று நாம் அறிவதற்கு முன்பாக பொற்பனைக்கோட்டையின் விவரங்களையும் பார்த்துவிடலாம்.

ஆ. வேப்பங்குடியில் பொற்பனைக்கோட்டை வெள்ளாற்றிலிருந்து வடக்கு திசையில் சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் பொற்பனைக்கோட்டை அமைந்துள்ளது. இந்த வெள்ளாறு வடபகுதியான சோழ நாட்டையும் தென்பகுதியான பாண்டிய நாட்டையும் இரண்டாகப் பிரிக்கும் எல்லையாக அமைந்தி ருப்பதாக பாண்டிமண்டலசதகம் குறிப்பிடுகின்றது .

திருவரங்குளத்தை அடுத்து வடபகுதியில் வேப்பங்குடி அமைந்துள்ளது. வேப்பங்குடி ஊரின் மேற்குப்பகுதியாக பொற்பனைக்கோட்டை அமைந்துள்ளது. பொற்பனைக் கோட்டையைப் பற்றிய புராண கதைகளில், அந்த ஊர் திருவரங்குளம் கோயிலுடன் சேர்ந்தே வழங்கிவருகின்றது.

தற்போது திருவரங்குளமும் வேப்பங்குடியும் இரு வேறு ஊர்களாக ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ளன. திருவரங்குளம் ஒன்றிய தலைமையகமாகிவிட்டது. வேப்பங்குடி ஒரு சிற்றூராகவே உள்ளது. திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலின் மேற்கு நுழைவாயிலின் காவல் தெய்வமாக இருப்பது பொற்பனைக்கோட்டை முனி என்பது குறிப்பிடத்தக்கது.

பழங்காலத்தில் பொற்பனைக்கோட்டையை உள்ளடக்கிய வேப்பங்குடியானது திருவரங்குளத்தின் ஒரு பிரிக்கமுடியாத பகுதியாக இருந்துள்ளது. பொற்பனைக்கோட்டை பலவித மான மிகப்பழங்காலத் தொல்லியல் சான்றுகளைக் கொண்டுள்ளது.அவற்றில் மிகவும் முக்கியமானது அழிந்துபோன பழைய கோட்டை. இந்த ஊர் மக்கள், தங்கப்பனை மரம் உள்ள கோட்டை என்ற பொருளில் இந்த கோட்டையை வழங்கி வருகின்றனர்.சேலம் ஆறகலுரில் இருக்கும் பொழுது வாணாதிராயர் திருவண்ணாமலைக் கோயிலுக்கு பொன்வேய்ந்ததால் தங்கள் பெயர்களுடன் “பொன்பரப்பினான்“ என்னும் விருதுப்பெயரை ஏற்று வந்துள்ளனர்.

அந்த வகையில் பொன்பரப்பினான் கோட்டை என்று பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்தை ரகுபதி அவர்களும் கோபாலகிருஷ்ண காந்தி அவர்களும் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இந்த கருத்து ஏற்புடையதாக இல்லை. மற்றொரு வரியில் கோபாலகிருஷ்ண காந்தி அவருடைய நூலில் குறிப்பிடும் போது பொற்பனைக்கோட்டையின் வரலாற்றைச் சொல்லும் எந்த குறிப்பும் இல்லை என்றும் இங்கிருந்து ஒரு அரசு தோன்றியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது பொற்பனைக்கோட்டையின் மீது அவர்கள் கொண்டுள்ள அக்கரையைக் காட்டுவதாக உள்ளது. அப்போதைய நிலையில் கிடைத்த கருத்துகளைப் பதிவு செய்திருக் கிறார்கள்.மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178-1218 பொ. ஆ.) காலத்தில்தான் வாணாதிராயர்கள் முதன்முதலாக புதுக்கோட்டைப் பகுதியில் கையொப்பம் இடும் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டிருந்தார்கள் என்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன .

வேப்பங்குடியில் கிடக்கும் அழிந்து போன பொற்பனைக்கோட் டையின் தொல்லியல் தடயங்கள் புதுக்கோட்டைப் பகுதிக்கு வாணாதிராயரின் இடப்பெயர்வு ஏற்படுவதற்கு முன்பு ஏற்பட்டதாகும்.பொற்பனைக்கோட்டை வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழிக் கல்வெட்டு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இக் கல்வெட்டு பேராசிரியர் சு.இராசவேலு, டி.தங்கத்துரை, எஸ்.பாண்டியன் மற்றும் ஏ.மோசஸ் ஆகியோர்களால் ஆவணம் இதழ் 24-ல் வெளியிடப்பட்டுள்ளது.

”கோவென்கட்டிற் நெதிர ணாறு பொன் கொங்கர் விண்ணக்கோன் ஆ எறிஇத்து ஏவ அதவ்வனாரு அங்கப்படைத் தாணையன் கணங்குமாரன் கல்” என்பது கல்வெட்டின் வாசகமாகும் . கல்வெட்டில் இடம்பெற்றுள்ளவர் பாண்டியரோ சோழரோ அல்லர்.இதன் மூலம் ஒன்று தெளிவாக விளங்குகின்றது. பொற்பனைக்கோட்டை வளாகம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் புதைகுழியாக பயன்பட்டிருக்கின்றது என்பது அது. பிற்காலத்தில் கோட்டை கட்டப்பட்டிருந்தால் நடுகல்லை அங்கிருந்து அகற்றியிருப்பார்கள். எனவே, பொற்பனைக் கோட்டை காலத்தால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையது.

மேற்கண்டவாறு பாண்டிய நாட்டெல்லைக்குள் இருந்த தடாதகைக்கோட்டை மகாபாரதக்காலம் என்று முடிவு செய்திருக்கும் இந்த வேலையில் தடாதகையின் திருவரங்குளம் (பொற்பனைக்கோட்டை) தொடர்பு பொற்பனைக் கோட்டையின் காலத்தையும் கண்டறிய உதவுகின்றது. இது திருவரங்குளம் கோயில் ஸ்தலபுராணம் குறிப்பிடும் ஒரு அரிய செய்தியிலிருந்து நன்கு விளங்குகின்றது. அதாவது தடாதகை என்ற வீரப்பெண் திருவங்குளத்தில் சோழ மன்னன் ஒருவனைப் போரிலே தோற்றடித்துக் கொன்றதாகக் குறிப்பிடுகின்றது.

திருவரங்குளம் கோயில் ஸ்தலபுராணத்தில் குறிப்பிடப்படும் கரிகாலன் (கல்மசபாத சோழன்) தடாதகையால் தோற்கடிக்கப்பட்ட சோழ மன்னனாக இருக்கலாம். பொற்பனைக்கோட்டையின் மேற்குத் திசையில் (கலசபுரம் புதைகுழிகளை உள்ளடக்கிய) திருக்கட்டளை வரை தொடர்ச்சியாக பல ஊர்களில் கல்வட்டங்களைக் கொண்ட முதுமக்கள் புதைகுழிகள் அமைந்துள்ளன.

அதைப் போல கிழக்குத் திசையிலும் பெரும்பெரும் செம்புராங்கற்களைக் கொண்ட கல்வட்டங்களுடன் ஆன முதுமக்கள் புதைகுழிகள் அமைந்துள்ளன. இவை சுமார் கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையிலான காலத்தைச் சேர்ந்தவை களாகும். அவற்றின் காலத்தை முடிவு செய்யவும் பொற்பனைக்கோட்டையின் காலத்தை முடிவு செய்யவும் இப்பகுதிகளில் அரசு தொல்லியல் அகழாய்வுகளைச் செய்ய முன்வரவேண்டும்.

உள்ளுர் மக்கள் சொல்லும் ஒரு கதையில் பொற்பனைக் கோட்டை சோழ வம்சத்தைச் சேர்ந்தது என்று குறிக்கின்றனர். இக்கதை பழைய ஓலைச்சுவடி ஒன்றில் சொல்லப்பட்டிருப் பதாக அதை மேற்கோல்காட்டி கே.ஆர்.வெங்கடராம அய்யர் புதுக்கோட்டை மேனுவலில் எழுதியுள்ளார்.

காட்டில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர் ஒருவர்இ வழி தெரியாமல் தவித்த ஒரு வேடனின் மனைவியை அவள் கனவனிடம் (வேடன்) ஒப்படைத்தார். வேடன் முனிவனுக்கு காட்டில் கிடைத்த பழங்களையும் கிழங்குகளையும் கொடுத்தான். முனிவன் அவனுக்காக ஒரு பொற்பனை மரத்தைப் படைத்து தினமும் ஒரு பொற்பனம்பழம் கிடைக்கச் செய்தான்.

அதை வேடன் ஒரு வல்லநாட்டு செட்டியாரிடம் கொடுத்து தனக்கு வேண்டிய உணவுப்பொருட்களை வாங்கிக் கொண்டான். இவ்வாறு பல ஆண்டுகள் 4420 பொற்பழங்க ளைப் பெற்ற செட்டியார் பெருவசதிபடைத்தவரானார். இதை தெரிந்து கொண்ட வேடன் அதிகமான பொருட்களைக் கேட்க, செட்டியார் கொடுக்க மறுத்துவிட்டார்.

வேடன் சோழ மன்னனிடம் சென்று முறையிடுகின்றான். பழங்கள் முழுவதும் பொன்னால் ஆனது என்று அறிந்த மன்னன், முனிவனையும் பொற்பனை மரத்தையும் கண்டுபிடிக்க உத்தரவிடுகிறான். முனிவரையும் மரத்தையும் எங்கு தேடியும் காணமுடியவில்லை. அவர்கள் மாயமாக மறைந்துவிட்டனர். அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருந்தது. அது கண்ட மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான்.

அதன்பிறகு பாண்டிய இளவரசி தடாதகையின் அச்சுறுத்தல் காரணமாக சோழ மகாராஜன் கரிகாலன் அங்கே ஒரு கோட்டையைக் கட்டினான் என்று மேற்சொன்ன சுவடியிலே எழுதப்பட்டுள்ளது. அதுதான் பொற்பனைக்கோட்டை ஆகும். ரகுபதி போன்றவர்கள் பொற்பனைக்கோட்டை வேறு, திருவரங்குளம் வேறு என்று இருவேறு ஊர்களாக பிரித்துப் பார்த்ததனால் அவர்களுக்கு இது விளங்கவில்லை.

“பொற்பனை“ என்ற சொல் உண்மையில் பனைமரத்தைக் குறிக்கவில்லை. இச் சொல்லில் “பனை“ என்பது “கருப்பு“ என்னும் பொருளில் கையாளப்பட்டுள்ளது. பொன்கருப்பு. அதாவது ”கரும்பொன்” என்பது வைரக்கல்லைக் குறிப்பதாகும்.இது ஆபரணங்கள் செய்யப்பயன்படுகின்றன. இக் கல்லானது ஓடி ஓடித் தேடினாலும் ஒரு நாளைக்கு ஒன்றுக்குமேல் கிடைத்துவிடாது. அதனால்தான் ஒரு நாளைக்கு ஒன்று என மரத்திலிருந்து விழுவதாக கதையில் சொல்லப்பட்டுள்ளது. நெடுநாட்களாக இக் கல் வல்லநாட்ட செட்டியார்களின் வணிகப்பொருட்களாக இருந்திருக்க வேண்டும்.

பொற்பனைக்கோட்டையில் மிக முக்கிய தொல்லியல் தடயமாக செங்கற்கள் கிடைக்கின்றன. இக்கற்கள் செவ்வக வடிவத்தில் உள்ளன. இவை சுண்ணாம்பு கலவை வைத்துக் கட்டப்பட்டுள்ளன. செங்கல்லின் நீலம் 1.25 அடியாக உள்ளது. 0.5 அடி அகலம். 4 அங்குலம் கனம். மொத்தம் கோட்டை 4 ஏக்கர் அளவில் 1 கிலோமீட்டர் தூரம் கிழக்கு மேற்கில் நீல்வட்டமாக அமைந்துள்ளது.

கோட்டையின் உட்பகுதி மட்டும் 43.87 ஏக்கர் ஆகும். இக்கோட்டை 32 கொத்தளங்களைக் கொண்டிருந்ததற்கான அடித்தளங்கள் தெரிகின்றன. 50 அடி அகலம், 20 அடி ஆழம் கொண்ட அகழி கோட்டையின் வடபுறத்தில் தற்போதும் காணப்படுகின்றது. நான்குபுறமும் வாசல்கள் இருந்துள்ளன. எம்.ரகுபதி அவர்கள் தந்துள்ள விவரங்கள் யாவும் மிகச்சரியானவை பயனுள்ளவை.

கோட்டையின் அகழி அருகில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனியாளம் என்ற குளத்துடன் வாய்க்கால் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மிகவும் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.பொற்பனைக்கோட்டையானது சோழரின் ஒரு புகழ் மிக்க கோட்டையாக இருந்திருக்கின்றது. இக்கோட்டை பாடலி புத்திரத்தில் இருந்த மௌரிய அரண்மனையுடன் பல விதத்தில் ஒப்பிடுவதாகக் காணப்படுகின்றது.

பொற்பனைக்கோட்டையில் பாதுகாப்பு கொத்தளங்கள் மிக உயரமாக மௌரிய அரண்மனையில் இருந்தது போலவே எழுப்பப்பட்டிருந்தன. மௌரிய அரண்மனையில் 570 பாதுகாப்பு கோபுரங்கள் இருந்தன. 64 நுழைவாயில்கள் இருந்தன.மௌரிய அரண்மனையைவிட பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த பொற்பனைக்கோட்டையில் 32 பாதுகாப்புக் கோபுரங்கள் இருந்தன. அவற்றிற்கான அடித்தளங்கள் தற்போது அடையாளங்காணப்பட்டுள்ளன.

பொற்பனைக்கோட்டையின் வடபுறத்தில் சுரங்கப் பள்ளம் என்ற குழி உள்ளது. இது வல்லம் கோட்டை வரை செல்வதாகச் சுவடியில் குறிப்பிடப்படுகின்றது. இதை என்.தியாகராசனும், வெங்கடராம அய்யரும், ரகுபதியும் பதிவு செய்துள்ளனர். பொற்பனைக்கோட்டைக்கும் வல்லத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்துள்ளது. திருவரங்குளம் ஸ்தலபுராணத்திலும் வல்லம் ஸ்தலபுராணத்திலும் கல்மஷபாத சோழன் பேசப்படுகின்றான். கல்மஷபாதன் என்பது கரிகாலன்தான் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வல்லம் ஸ்தலபுராணம் மேலும் சில தகவல்களைத் தருகின்றன. கரிகால சோழனின் தந்தை ஸ்ரீகண்டன் என்றும் தாய் வல்லம்மாள் என்றும் இந்நூல் குறிப்பிடுகின்றது. வல்லம்மாள் பெயரில் வல்லம் என்ற ஊர் நிறுவப்பட்டுள்ளது.வல்லத்தில் அக்காலத்தில் எழுப்பப்பட்ட சிவன் கோயிலுக்கு வல்லத்தூருடையார் என்றும் கரிகால சோழிஸ்வரம் என்றும் பெயர்கள் வழங்கப்பட்டதாக பிற்காலத்திய கல்வெட்டுகளால் அறிகின்றோம். வல்லம் அகழாய்வில் கிடைத்த தொல்லியல் தடயங்கள் கி.மு.1000 வரை பின்னோக்கிய காலத்தைக் காட்டுவதாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் கடல்சார் வரலாற்றுத்துறை பேராசிரியர் வீ.செவ்வக்குமார் கருதுகின்றார்.

எனவே, கிடைத்திருக்கக் கூடிய பல்வேறு சான்றுச் சூழல்களை கருத்தில் கொண்டு சங்க இலக்கியங்களில் அகநாநூறு (336;21, 356;13) குறிப்பிடும் “வல்லம் கிழவோன்” சோழ அரசன் கரிகாலனின் தந்தை ஸ்ரீ கண்டன் என்று அடையாளம் காணப்படுகின்றது. வல்லத்தின் மீது படையெடுத்த ஆரியர்களை வீழ்த்திய சோழ அரசன் இவனேயாவான்.மேலும், பொற்பனைக்கோட்டையின் மையப்பகுதியில் உள்ள தொல்லியல் ஆதாரத்தைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். இக் கோட்டையின் மையப்பகுதியில் ஒரு வட்டமான தொல்லியல் திடல் உள்ளது. இதனைச் சுற்றிலும் செங்கற்கட்டுமானம் உள்ளது. அதனைச் சுற்றி ஒரு வட்டமான அகழி உள்ளது. அகழியின் வெளிச்சுற்றில் ஒரு செங்கல் சுவர் உள்ளது.

இவை யாவும் சிதைந்துபோயுள்ளன. இவற்றின் அமைப்பைப் பார்க்கும் போது இது ஒரு பௌத்த ஸ்தூபி இருந்து அழிந்து போன அடையாளமாகக் காட்சியளிக்கின்றது. பௌத்த சமயம் தொடர்பான வேறு அடையாளங்கள் இங்கு கிடைக்கவில்லை.புதுக்கோட்டை அருகே அமைந்துள்ள வெள்ளாற்றின் தென்கரையிலிருந்து பாண்டிய அரசின் தலை நகர் தெற்கு நோக்கி மதுரை அருகே மணலுருக்குச் சென்றுள்ளது. அதைப்போன்று வடகரையிலிருந்து சோழ அரசின் தலைநகர் வடக்கு நோக்கி வல்லத்திற்குச் சென்றிருக்கின்றது. எனவே, மூவேந்தர்களில் மூத்த பரம்பரையினரான சேரர் தலைநகர் கோனாட்டிலிருந்து குட்டநாட்டிற்குச் சென்றிருக்குமா என்ற வினாவை எழுப்புகின்றது இந்த ஆய்வு.

தடாதகைக்கோட்டை, பொற்பனைக்கோட்டை, வல்லக்கோட்டை, மணலூர் (மதுரை – கீழடி) கோட்டை ஆகியன மகாபாரதக் காலத்தைச் சேர்ந்தவைகள் என்பதை சான்றுகள் உறுதி செய்கின்றன.இனி மகாபாரதக் காலம் எது என்று பார்ப்போம். மகாபாரதம் கி.மு. 4 ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் இலக்கியமாக எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. மகாபாரதம் எழுதப்பட்ட காலத்தை முடிவு செய்வதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுகின்றது.

பெரும்பாலான ஆய்வாளர்கள் கி.மு. 9 ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 8 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் மகாபாரத நிகழ்வுகள் நடந்தேறின என்று கருதுகின்றார்கள். பி.டி.ஸ்ரீநிவாச ஐயங்கார் மகாபாரதத்தின் பின்னோக்கிய காலத்தை கி.மு. 1000 வரை கொண்டுசெல்கின்றார். எனவே, இந்நிலையில் தடாதகைக்கோட்டை மற்றும் பொற்பனைக் கோட்டை ஆகியவற்றின் காலத்தை கி.மு. 1000 என்று கருதலாம்.

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் பி.பி.லால் அவர்கள் கௌரவர்களின் தலைநகரான அஸ்தினாபுரத்தில் அகழாய்வு மேற்கொண்டார். அதில் கிடைத்த தொல்லியல் பொருள்கள் கி.மு. 2000 முதல் கி.மு. 1500 வரையிலான காலத்தைச் சேர்ந்ததாக குறிப்பிடுகின்றார். இதனடிப்படையில் பாரதப்போர் கி.மு. 1500க்கு முன்பு நிகழ்ந்திருக்க வேண்டும் என்று மத்திய தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

எத்தனை நூற்றாண்டுகள் மகாபாரதத்தின் காலம் பின்னோக்கிச் சென்றாலும், அத்தனை நூற்றாண்டுகள் தடாதகைக்கோட்டை மற்றும் பொற்பனைக்கோட்டையின் காலமும் பின்னோக்கிச் செல்லும் என்பது தெள்ளத் தெளிந்த உண்மை. இது பற்றி அறிந்து கொள்ள இத்திடலில் அரசு தொல்லியல் அகழாய்வு நடத்தவேண்டும். 

தகவல் : முனைவர் அ.சந்திரபோஸ், உதவிப்பேராசிரியர், வரலாற்றுத்துறை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (தன்னாட்சி) புதுக்கோட்டை.  தொடர்புக்கு.. 9443280819.


Tags:    

Similar News