பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை
மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு கலெக்டர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இருதினங்களாக மழை பெய்து வருவதாலும்,பச்சை மலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும் ஏரிகளுக்கு அதிக நீர் வந்து கொண்டிருக்கிறது.இதனால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி வெளியேறும் நீர் அனைத்தும் மருதையாற்றிற்கு செல்கிறது.
இதன் காரணமாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள மருதையாறு நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 212.47 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. உபரி நீர் முழுவதும் அணையிலிருந்து வெளியேறிக்கொண்டிருப்பதாலும், தொடர்மழை நீடித்து வருவதாலும், நீர்த்தேக்கத்திற்கு வந்துகொண்டிருக்கும் சுமார் 2000 கன அடி நீர்வரத்தும் மருதையாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மருதையாற்றின் வரத்து நீர்,கிளை ஓடைகளின் வரத்து நீர் ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கட பிரியா மழை தொடர்ந்து பெய்து வருவதால் வரத்து நீர் அதிகரித்து கூடுதலான நீர் வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது என்றும் மருதையாற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் கொட்டரை, குரும்பாபாளையம், ஆதனூர், பிலிமிசை, கூத்தூர், இலுப்பைகுடி, இராமலிங்கபுரம், புஜங்கராயநல்லூர், நொச்சிக்குளம், தொண்டபாடி, அழகிரிபாளையம், கூடலூர் கிராம பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் ஆற்றுப் பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும், கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளுமாறும், குழந்தைகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவோ வெள்ள பகுதியை பார்க்கவோ அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ள மாவட்ட ஆட்சியர், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.