பெரம்பலூர் மாவட்டத்தில் வேதநதி ஆற்றில் 40 ஆண்டுகால ஆக்கிரமிப்பு மீட்பு
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம்,வேதஆற்று பகுதியில் 40 ஆண்டு காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நிலம் மீட்கப்பட்டது.;
வேப்பந்தட்டை வட்டம், அன்னமங்கலம் கிராமம் வேதநதி ஆற்றுப் பகுதியில் 40 ஆண்டு காலமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் மீட்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், 33 அணைக்கட்டுகளும் உள்ளன. கடந்த வருடம் பெய்த வடகிழக்கு பருவமழையால் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 73 ஏரிகளும் நிரம்பி நீர் வழிந்தோடின. இதனால் ஏரிகளின் நீர்பரப்பு பகுதிகளில் பொதுமக்களால் 73.930 ஹெக்டேர் பரப்பளவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விவசாயம் செய்த வந்த நிலங்கள் அனைத்தும் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் முழு அளவில் மழை நீர் தேங்கியதால் அனைத்து ஆக்கிரமிப்பாளர்களும் விவசாயம் செய்வதை நிறுத்திவிட்டனர்.
இதனால், ஆக்கிரமிப்பு முழுவதுமாக அகற்றப்பட்டது. மேலும், நீர் ஆதாரத்தை அதிகப்படுத்தவும் ஏரிகள் மற்றும் நீர் வழித்தடங்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையாகவும், உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பொருட்டு அன்னமங்கலம் கிராமத்தில் வேதநதி ஆற்றுப் பகுதியில் கிராம புல எண் 345-ல் 00077 ச.மீ., புல எண் 346-ல் 00424 ச.மீ. மற்றும் புல எண் 381-ல் 00524 ச.மீ. ஆகிய பரப்பளவில் கட்டப்பட்டுள்ள கூரை வீடுகள், தகரக்கொட்டகை, ஆஸ்பட்டாஸ் வீடு மற்றும் ஓட்டு வீடு ஆகியவை கட்டப்பட்டு 40 ஆண்டு காலமாக பொதுமக்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று (5ம் தேதி) அனைத்து ஆக்கிரமிப்பு பகுதிகளையும் உயர்நீதிமன்ற உத்தரவின்படி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன், உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ், வருவாய் வட்டாட்சியர் சரவணன், வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல் துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டது.