சாலை அமைக்கும் பணியின்போது மண்ணில் புதைந்து கிடந்த தொன்மையான கல் மர படிமம்
தொல்லியல் அருங்காட்சியத்தில் பத்திரப்படுத்த வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் கடந்த அக்டோபர் மாதம் சுமார் 7 அடி நீளமுள்ள கல் மரம் துண்டு அங்குள்ள ஆணைவாரி கிளை ஓடையில் கண்டெடுக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகள் தொன்மைவாய்ந்த இந்த கல்மரத்தை மீட்டு பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூரில் உள்ள தேசிய கல்மரப்பூங்கா வளாகத்தில் உள்ள தொல்லியல் அருங்காட்சியத்தில் பத்திரப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என அங்குள்ள சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து கல் மரம் கண்டெடுக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பின்னர் இரண்டு ஆண்டுகள் ஆகியும் கல் மரத்தை அதிகாரிகள் பாதுகாப்பதற்காக எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்பகுதியில் வேப்பூர் ஒன்றிய பொது நிதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை அமைக்கும் பணியின்போது தொன்மையான கல் மரப் படிமம் மீது மண் கொட்டி மூடி சாலை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலறிந்த கிராம மக்கள் அரசு உயரதிகாரிகளுக்கு அளித்த புகாரின் பேரில் சாலை அமைக்கும் பணிக்காக மண் மூடி புதைக்கப்பட்ட கல் மர படிமத்தை மீட்கும் பணி நேற்று தொடங்கியது. குன்னம் வட்டாட்சியர் அனிதா தலைமையில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தனலட்சுமி மற்றும் தொல்லியல்துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் பொக்லைன் இயந்திரம் கொண்டு மண்ணை அகற்றி கல் மர படிமத்தை மீட்டனர்.