பெரம்பலூரில் முயல்களை வேட்டையாடி குவித்த கும்பல்; வனத்துறையினர் அதிரடி கைது
முயல் வேட்டையில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவை சேர்ந்த 15 பேரை வனத்துறையினர் பிடித்து அபராதம் விதித்தனர்.;
பெரம்பலூர் அருகே சிறுநிலாப் பகுதியில் முயல் வேட்டையில் ஈடுபட்ட கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகாவை சேர்ந்த 15 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா கல்லை கிராமத்தைச் சேர்ந்த பொன்னம்பலம்(60), செல்வம்(30), சரவணன்(24), கண்ணுசாமி(38), மோகன் ராஜ்(21) உள்ளிட்ட 15 பேர் நேற்று முயல் வேட்டையில் ஈடுபட்டனர். இவர்கள் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் உள்ள கிராமங்களில் முயலை வேட்டையாடி தங்கள் குல தெய்வத்திற்கு படைப்பார்களாம்.
இந்நிலையில், அவர்கள் சிறுநிலா பகுதியில் முயல்வேட்டையில் ஈடுப்பட்டபோது, அந்த பகுதியில் மாவட்ட வன அலுவலர் குகணேஷ் உத்தரவுப்படி, வனச்சரகர் மாதேஸ்வரன், வனவர்கள் பாண்டியன், சுப்பிரமணியன், வனக் காப்பாளர்கள் ஆனந்தபாபு, வெங்கடேசன், அபிப்பிரியா ஆகியோர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வேட்டையாடியவர்களை பிடித்து அவர்களிடமிருந்து முயல்கள் மற்றும் முயல்களை பிடிக்க பயன்படுத்தப்பட்ட வலைகளையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து முயல் வேட்டையாடிய குற்றத்திற்காக அபராதம் விதித்தனர். மேலும், இனி முயல்களை வேட்டையாட வரக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.