அரிசிக்கொம்பன் விவகாரம்.. அதிகாரிகள், வனத்துறை, போலீசாருக்கு மக்கள் சல்யூட்
தொடர்ந்து நான்கு நாட்கள் இரவும், பகலும் அரிசிக்கொம்பனை தொடர்ந்து சென்று மக்களை அதிகாரிகள் பாதுகாத்து வருகின்றனர்.
தமிழகம் மட்டுமல்ல... இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட இப்படி யானையுடன் ஒரு நீண்ட போராட்டம் நடந்திருக்குமா? என்று கூற முடியாது. வனத்துறை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக அரிசிக்கொம்பன் யானையினை நொடிக்கு நொடி கண்காணித்து வருகிறது. அதுவும் கடந்த நான்கு நாட்களாக தமிழக வனத்துறை உயர் அதிகாரிகள், அனைத்து பதவிநிலை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், கால்நடைத்துறையினர், யானை கண்காணிப்பாளர்கள், வருவாய்த்துறையினர் என பலரும் யானையை கண்காணிக்கின்றனர்.
24 மணி நேரமும் யானையை பின் தொடர்கின்றனர். முறையான உணவு இல்லை. குடிநீர் வசதி இல்லை. குளிக்க வசதியில்லை. இயற்கை உபாதைகளை கழிக்க வசதியில்லை. உடை மாற்ற வசதியில்லை. ஓய்வு எடுக்க நேரம் இல்லை. துாக்கம் இல்லை. அதிகாரிகள் மட்டுமின்றி ஒன்றுக்கு மூன்று அமைச்சர்கள் நேரடியாக களத்தில் இறங்கி வேலை வாங்குகின்றனர். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகள், விபரீதம் புரியாமல் வேடிக்கை பார்க்க வரும் மக்கள், திடீரென பெய்யும் மழை, கொளுத்தும் வெயில், யானையை புதர்களை கடந்து பின் தொடரும் சிக்கல், புதர்களில் எந்த வகையான பாம்புகள் இருக்குமோ என்ற அச்சம், பயம் அத்தனையும் கடந்து யானையிடம் இருந்து மக்களை பாதுகாக்க ஒரு பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் தியாகத்தையும், போராட்டத்தையும் பாராட்டாமல் இருக்கவே முடியாது.
அரிசிக்கொம்பன் யானை, வாழைமரம், தென்னை மட்டைகள் உள்ளிட்ட பசுந்தீவனங்களை தின்றாலும், அதற்கு விருப்பமான அரிசி, ஜீனியை தேடி குடியிருப்புகளை நோக்கியே வருகிறது. வனத்திற்குள் செல்ல விரும்பவில்லை. கடந்த மாதம் தான் அரிசிக்கொம்பனுக்கு 6 டோஸ் மயக்க மருந்து தரப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வளவு குறைந்த இடைவெளியில் மீண்டும் இதே போன்ற மயக்க மருந்து கொடுப்பது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்த போது, ‘வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்த கருத்து நியாயமானது. யானையின் வயது 35, உயரம் 12 அடி, எடை சுமார் 5520 கிலோ வரை இருக்கும். இதற்கேற்ப மதிப்பீடு செய்து தேவையான அளவு மயக்க மருந்து வழங்கப்படும். இதுவும் யானையை பிடிக்க வேண்டிய அவசியம் வந்தால் மட்டும் பயன்படுத்துவோம் என விளக்கம் அளித்தார்.
இதனால் யானையை பின்தொடர்ந்து வனத்திற்குள் அனுப்ப நடக்கும் முயற்சிகள் தோல்வி அடைந்து வருகின்றன. இதனால் குறைந்தபட்சம் குடியிருப்புகளுக்குள் வராமல், தடுக்கும் நிகழ்வுகளில் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கும் என்பது தெரியவில்லை.