நீலகிரியில் சிறுவர்களுக்கான தடுப்பூசி முகாம்: கலெக்டர் துவக்கி வைப்பு
12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,700 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 12 வயது முதல் 14 வயது உடைய சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது: நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாமில் ஒரு மருத்துவ அலுவலர், ஒரு செவிலியர், ஒரு தரவு பதிவாளர் என 3 பேர் கொண்ட குழு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்ட 21,700 சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. நீலகிரியில் இதுவரை முதல் தவணை 5,45,326 பேர், இரண்டாவது தவணை 5,33,247 பேர் என மொத்தம் 10,78,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
தகுதியான நபர்கள் அனைவரும் தங்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். முகாமில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வனத்துறை அலுவலர்கள் சச்சின் (நீலகிரி), கொம்மு ஓம்காரம்(கூடலூர்), அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.