உதகை: கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு
மழை நீடித்தால் பொதுமக்களை முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதில் உதகை அருகே உள்ள காந்தல் பகுதியில் தாழ்வான இடங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழைநீர் புகுந்தது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற தீயணைப்பு துறையினர் மழைநீர் புகுந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை காந்தல் பகுதியில் கன மழையால் பாதிப்படைந்த பகுதிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் மற்றும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி ஆகியோர் மழைநீர் செல்லக்கூடிய கால்வாய்களை தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
கனமழையால் காந்தல் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேக்கமடைந்த குப்பை கழிவுகள் மற்றும் சேறு சகதிகளை அகற்றும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கனமழையின் தாக்கம் நீடித்தால் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்களை தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.